உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு

இவ்விதழில் பெ. தூரன், சுரபி, தேசிக விநாயகம் பிள்ளை, நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை போன்றோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. சுந்தானந்த பாரதியாரின் படைப்புகள் இவ்விதழில் அதிகமாக இடம்பெற்றிருக்கின்றன. ருஷ்ய அறிஞர் டால்ஸ்டாயைத் தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியதும் இந்த இதழ்தான்.

நல்லறம்

'நல்லறம்' எனும் திங்களிதழ் டி.எஸ். ஸ்ரீபாலை ஆசிரியராகக் கொண்டு ஜைன அறநிலையத்தின் வெளியீடாக மேல்சித்தாமூரிலிருந்து 1958ஆம் ஆண்டு சனவரி முதல் வெளிவந்துள்ளது. இவ்விதழிற்கு முதலிரண்டாண்டுக் காலம் வரை டி.எஸ். ஸ்ரீபாலும், பின்னர் வந்த இரண்டாண்டுகள் புலவர் கம்பீர நயினாரும், அதற்கும் அடுத்து மோ.ச. பரதனும் நான்காண்டுக் காலம் நடத்தி வந்துள்ளனர். இவ்விதழில் சைன மதம் தொடர்பான கட்டுரைகள், தீர்த்தங்கரர்கள் பற்றிய ஆய்வுகள், சைனர் வாழிடங்களின் வரலாறுகள், சைன நூலாய்வுகள் போன்றன வெளிவந்துள்ளன.

இவ்விதழில் அப்பாண்டைநாதர் உலா, திருநாதர் குன்றத்துப் பதிகம், திருமேற்றிசையந்தாதி ஆகிய மூன்று சுவடிப்பதிப்புகள் வெளிவந்துள்ளன.

முக்குடை

'முக்குடை' எனும் திங்களிதழ் த. சனத்குமாரை ஆசிரியராகக் கொண்டு சமண இளைஞர் மன்ற வெளியீடாகச் சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது. தமிழ் -ஆங்கிலம் கலந்த இருமொழி இதழாகத் திகழ்கிறது. இவ்விதழில் தத்துவ விளக்கக் கட்டுரைகள், கதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், சமண சமயத்தினர் நிலை, இளைஞர்களின் மத ஈடுபாடு, சிறுவர் பகுதி, ஆகம விளக்கம், அறத்துணுக்குகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன. ஆதிபகவன் முதலான தீர்த்தங்கரர்கள் அருளிய அறவுரைகளைப் பரப்புவதும், அவர்களின் அறச் சிந்தனைகளை உரிய முறையில் மக்களை அடையச் செய்வதும்