பக்கம்:பர்மாவில் பெரியார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரங்கூன் வருகை

11

அளவில் மகிழ்ச்சியுற்றேன், ஆனால் அதற்கப்பால் நான் எந்த நினைப்பும் கொள்ளவில்லை.

அப்போது நான் இரங்கூனில் இயங்கி வந்த பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளராக இருந்தேன்.

திராவிட முன்னேற்றக்கழகம் தோன்றிய தொடக்க காலம், பெரியார் திருமணத்தின் காரணமாக வெறுப்புற்ற திராவிடர் கழகத் தோழர்கள், தளபதி அண்ணாவின் தலைமையில் பிரிந்து உருவாக்கிய கழகம் திராவிட முன்னேற்றக் கழகம்'. அதன் ஒரு கிளையாக இயங்கி வந்தது பர்மா திராவிட முன்னேற்றக் கழகம்.

பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐநூறு உறுப்பினர்கள் இருந்தார்கள். அக்கழகத்தின் தோழர்கள் நான் இரங்கூனில் இருந்த காலத்தில் என்னை அடிக்கடி சந்தித்து கழகப்பணியில் என் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டார்கள். புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய கட்டத்தில் என்னை வற்புறுத்தி ஒப்புதல் கேட்டுப் பொதுச் செயலாளர் பதவியை எனக்குக் கொடுத்தார்கள்.

1954 ஆம் ஆண்டு பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த நான், பெரியார் பர்மாவுக்கு வருகிறார் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியடைய முடிந்ததே தவிர அதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.

செய்தி கேட்ட மறுநாள், பர்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், சிறந்த பேச்சாளருமான சேரன் என்னைத் தேடிவந்தார்.