பக்கம்:பல்சுவை விருந்து.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 பல்சுவை விருந்து

எல்லோருக்கும் ஒத்த உரிமை வழங்கி நடுநிலைமை தவறாமல் முறை செய்தல் முதலிய அடிப்படைகள் முடியாட்சிக்கும் வேண்டியவை; குடியாட்சிக்கும் வேண்டியவை. முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் மக்களின் நல் வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டு பொருட்பாலை எழுதிய தால் இன்றும் அவை செல்லத் தக்கவையாக உள்ளன. இனி, எதிர்காலத்திலும் - ஏன்? என்றென்றும் - போற்றத்தக்க வாய்மொழிகளாகவும் திகழும்.

அரசியல் தலைவன் எல்லாக் கடைமைகளையும் தானே செய்ய முடியாது. தனக்குத் துணையாகப் பலரைத் தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தக்கவர்கவரா அல்லரா என்று ஆராய்ந்து அறிதல் வேண்டும் தெரிந்து தெளிதல் வேண்டும். வள்ளுவர் எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பற்றிக் கூறுவார். ஒருவனை ஆராயும் போது, அறிய வேண்டியவை யாவை? அறத்தில் உறுதியான நம்பிக்கை, பொருள்வகையில் அவன் நாணயம் உடைமை, பொருள் நசையால் அறத்தைப் புறக்கணித்து வாழ்தல், தகாத வழியில் வரும் பொருளில் விருப்பம், இன்பத்தில் மூழ்கி கடமைகளை மறத்தல், இன்பத்திற்காகப் பிறர்க்கு அடிமையாதல், தன் உயிருக்காக அஞ்சி நெருக்கடியில் கை விடுதல், உயிருக்காக அஞ்சாமல் உதவி செய்யும் பண்பு, ஒருவனுடைய உயிர் வாழ்க்கைக்காக பிறர்க்கு இன்மை விழையாமை முதலிய பண்புகள் அவனிடம் உள்ளனவா என்பதை அறம், பொருள், இன்பம், உயிரச்சம் ஆகிய நான்கு வகையாலும். ஆராய்ந்த பிறகே அவன் தக்கவன் என்பதைத் தெளிந்து அவனைத் துணையாகக் கொள்ள வேண்டும் (501). இப்படி ஆராயுங்கால்,

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் (504)

என்ற முறையையும் தெரிவிக்கின்றார்.