பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

55



பண்படாதவர் அநாகரிக மக்கள் என்று வரலாற்றிற் குறிக்கப் பெறுவர். ஒரு நாட்டு நாகரிகத்தை அளக்க இவை ஐந்தும் பயன்படுகின்றன. இவற்றைக்கொண்டு காணின், மஹேந்திரன் காலத்துத் தமிழகம் சிறந்த நாகரிகத்தில் விளங்கியது என்பதறியலாம். பல்லவப் பேரரசனான மஹேந்திரவர்மன் குடைவித்த வரைக் கோவில்களில் உள்ள ஒவியங்கள், சிற்பங்கள் இவற்றைக் கொண்டு அவன் ஒவியம், சிற்பம், நடனம் இவற்றில் ஆர்வம் உடையவன் என்பதறியலாம்; அவனுடைய கல்வெட்டுகள் சிலவற்றைக் கொண்டு அவனது இசைப் புலமையை நன்குணரலாம்; அவன் இயற்றிய மத்தவிலாஸப் பிரஹஸனம் என்னும் வடமொழி வேடிக்கை நாடகத்தைக் கொண்டு அவன் நாடகப் பிரியன் என்பதை அறியலாம். அரசனே இந்த நாகரிகக் கலைகளிற் பற்றுக் காட்டினன் எனின், அவை அவனது பெருநாட்டில் நன்முறையில் வளர்ச்சியுற்றன என்பதைக் கூறவும் வேண்டுமோ?

ஓவியக் கலை

சென்ற பகுதியிற் கூறப்பட்ட சித்தன்ன வாசல் கோவில் ஒன்றே மஹேந்திரன் கால ஒவிய வளர்ச்சியை விளக்கப் போதுமானது. அக்கோவில் தூண்கள்மீது நடனமாதர் இருவர் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்வுருவங்கள் மிகவும் அழகாக அமைந்துள்ளன. அவை இரண்டும் கோவிலுக்கு வருபவரை மலர்முகத்தோடு வரவேற்பனபோல அமைந்துள்ள அருமைப்பாடு வியப்பூட்டுவதாகும்.