பக்கம்:பல்லவப் பேரரசர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

89



பிக்ஷுணியாக இருந்து காஞ்சியில் புத்தபீடிகை ஒன்றை அமைத்தாள்; அறம், செய்துவந்தாள். ஹியூன்-ஸங் காலத்தில் காஞ்சி நகரத்தில் பெளத்த ஸ்தூபிகள் பழுதுபட்டுக் கிடந்தன; பல்லவ நாட்டில் நூறு பெளத்த மடங்கள் இருந்தன. பதினாயிரம் துறவிகள் இருந்தனர். எனினும், பெளத்தம் அப்பொழுது வீழ் நிலையிற்றான் இருந்தது. பெளத்த துறவிகளுட் பலர் ஒழுக்கம் கெட்டிருந்தனர் என்பது மஹேந்திரன் கருத்து என்பது, அவனது நாடக நூலிலிருந்து வெளிப்படுகின்றது.

பல்லவ மன்னர் சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கட்கு ஆதரவு காட்டினர் - கோவில்கள் அமைத்தனர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன; ஆயின்; அவர்கள் பெளத்தத்தை ஆதரித்தனர் என்பதற்குச் சான்று கிடைப்பது அரிதாக இருக்கின்றது. இதனால், பல்லவர் காலத்தில் பெளத்தம் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டது என்னலாம். பல்லவர் செல்வாக்குப் பெற்ற சம்யங்கள் இரண்டே ஆகும்.அவை சைவம், வைணவன் என்பன.

வைணவம்

நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல் என்று தமிழன் பிரிவினை செய்த அன்றே திருமால் முல்லை நிலக் கடவுளாக வழிபடப்பட்டான். அஃதாவது, தமிழர்க்கு அறிவு வந்து திணை வகுக்கத் தொடங்கிய காலமுதல் இன்றுவரை தமிழ் நாட்டில் வைணவம் இருந்து வருகின்றது என்பதாம். அச்சமயம் இருந்ததைச் சங்கநூல்களாலும் அறியலாம். முதல் ஆழ்வார். மூவர் அருளிய அருட்பாடல்களால் வைணவ சமயம் நாட்டிற் பெற்றிருந்த செல்வாக்கை நன்குணரலாம். பல்லவ மன்னருள் முதற் காலப் பல்லவன் ஒருவன் மனைவியான