பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


190 அடி. பின்னர் கங்கை கொண்ட சோழபுரத்தில் தஞ்சை விமானம் போலவே கி.பி. 1025-ல் ஒரு விமானம் எடுக்கப்பட்டது. அடுத்துத் திரிபுவனேசுவரர் கோயில் விமானம் குறிப்பிடத்தக்கது.51 இந்த அளவு உயரமான விமானக் கோயில்கள் பிற்காலத்தில் கட்டப்படவில்லை.

அப்பர் தேவாரத்தில் சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டுக் கோயில்களைக் கூறியபின்,

1. கரக் கோயில், 2. ஞாழற் கோயில், 3. கொகுடிக் கோயில், 4. இளங்கோயில், 5. மணிக்கோயில், 6. ஆலக் கோயில்

என்னும் ஆறு வகைகள்52 கூறப்படுகின்றன.

கோயிலில் நீர்ப்படை செய்யுமுன் சிலையை வைக்கும் தற்காலிகமான இடத்தைப் 'பாலாலயம்’ என்று வட மொழியில் கூறுவதுண்டு. 'இளங்கோயில்’ என இங்கே கூறப்படுவது அதன் மொழிபெயர்ப்போ என்று தோன்றுகிறது.53

வடமொழியிலுள்ள சிற்ப நூல்கள் இந்த வகைகளை,

1. விஜயம், 2. ஸ்ரீயோகம், 3. ஸ்ரீவிசாலம், 4. ஸ்கந்த காந்தம், 5. ஸ்ரீகரம், 6. ஹஸ்தி பிருஷ்டம், 7. கேசரம்

எனக் கூறுகின்றன. யானை முதுகு போன்ற விமான அமைப்புடைய கோயில் கஜபிருஷ்ட விமானக் கோயில் அல்லது ஆலக்கோயில் எனப்பட்டது. ஆலக்கோயில் ஆனைக் கோயில் என்பதன் மரூஉ ஆகும்.

அக்காலக் கோயில்களிலிருந்த மூவகைகளைக் குறிக்க மூன்று வடசொற்களைப் பயன்படுத்தினர்.

1. சுத்தம் - முழுமையும் மரம் அல்லது கல்லால் ஆகியது.
2. மிஸ்ரம் - இரண்டு பொருள் கலந்து அமைப்பது.