பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் ஐந்து

நகரமைப்பு

புதிய கற்காலத்தின் தொடக்கத்தில் ஓரிடத்தே தங்கி வாழப் பழகிப் பயிர்த் தொழில் செய்யத் தொடங்கிய மனிதன் வீடுகள் கட்டினான். பல வீடுகள் கட்டப்பட்ட போது, ஒரு வீட்டுக்கும் மற்ற வீடுகளுக்கும் இடையே தகராறுகள் எழாமல், போக வரப் பொதுவான வீதி தேவைப்பட்டது. நடுவே சாவடி,அம்பலம்,கோயில் போன்ற பொது இடங்களுக்கு நிலம் ஒதுக்கினார்கள்.

வீடுகளின் வரிசைக்கு நடுவே ஆறு போல் கிடைத்த அகன்ற நெடிய இடம் தெரு ஆயிற்று. இவ்வாறு பலப்பல தெருக்கள் ஊரில் உண்டாயின. ஊர்கள் ஏற்பட, ஏற்பட முந்திய ஊரிலே நேர்ந்த பொது வசதிக் குறைகள் அடுத்த ஊரிலே நேராமல், வீடுகளும், வீதிகளும், பொது இடங்களும் பொருத்தமாகக் கட்டப்பட்டன. ஊரின் பொது வசதிகள் கவனிக்கப்பட்டன. கட்டப்பட்ட முறையும், திட்டமும் (Planning) நாளுக்கு நாள் மெருகேறின. இந்த மெருகும், அநுபவமும் நகரங்களை அமைப்புதற்குப் பெரிதும் பயன் பட்டன. நகரங்களை விட அதிகமான அக்கறை பின்பு, கோநகரங்களின் (இராசதானி) அமைப்பில் செலுத்தப்பட்டது.

இவ்வாறு நகரமைப்பு (Town Planning or urban Planning) என்பது ஒரு கலையாகவே உருவாயிற்று. பழந் தமிழர்களைப் பொறுத்தவரை கட்டடக் கலையைப்