பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

167



இந்திர விகாரம் ஏழுடன் போகி44
இந்திர விகாரம் ஏழுடன் புக்கு45
இந்திர விகாரம் எனஎழில் பெற்று46
இந்திர விகார மேழும் ஏத்துதலின்47

புத்த சைத்தியத்து இந்திரன் நிருமித்தனவாகிய ஏழரங்கு என்று48 இதற்கு அடியார்க்கு நல்லார் விளக்கம் எழுதினார். ‘புத்த சைத்தியம் என்பது பெளத்த வித்தியாசாலை அல்லது புத்தனாலயமுமாம்' என்றார்49 உ. வே. சாமிநாதையர்.

மணிவண்ணன் கோட்டம்

இதுவும் புகாரில் அமைந்திருந்த கோட்டங்களுள் ஒன்று. திருமாலின் கோயில் என்பதைப் பெயரில் இருந்தே அறிய முடிகிறது. மணிவண்ணன் கோட்டத்தைப்பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் வருகிறது. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வெளியேறுகையில் கோவலனும் கண்ணகியும் இக்கோயிலை வலஞ்செய்து புறப்பட்டமை கூறப்படுகிறது.

கணி கிளர் அரவின் அறிதுயில மர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலஞ்செயாக் கழிந்து50

இப்பகுதியை விளக்கி, 'அரவணையின் மீதே அறிவோடு துயில் கொள்ளும் மணிவண்ணன் என்னும் திருநாமத்தையுடைய திருமால் கோயிலை வலஞ் செய்து’51 என அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

காவிரிப்பூம்பட்டின நகரமைப்பில் மேற்குறித்த கோயில்கள் இடம் பெற்றிருந்தமை புலனாகிறது. 'புறம் பணையான் கோயில் என்கிற ஐயனார் கோயில் நகரின் புறத்தே அமைந்திருந்தது என்பார் பண்டாரத்தார்.52