பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



பல்வேறு குழாஅத் திசைஎழுந் தொலிப்ப
மா காலெடுத்த முந்நீர் போல
முழங்கிசை நன்பணை யறைவனர் நுவலக்
கயங்குடைந் தன்ன இயந்தொட் டிமிழிசை
மகிழ்ந்தோ ராடும் கலிகொள் சும்மை50

ஆற்றின் இருபுறமும் கரைகளைப் போல வீடுகள் அமைந்திருந்தன. வீதிகளுக்கு ஆறுகளை உவமை கூறும் முறை இருந்துள்ளது.

நகரின் கடைத் தெருவில் பன்னாட்டு மக்கள் நிறைந்திருந்தனர். பல மொழிகளைப் பேசும் மக்களின் பேச்சொலிகள் கேட்டன. நகரமைப்பில்-பூம்புகாரைப் போல, மதுரையும் பன்னாட்டினர் (International Community) வாழ்ந்த நகரமாயிருந்துள்ளது. -

பல்வேறு விழாக்களை, மக்களுக்குப் பறையறைந்து தெரிவிக்கும் ஓசை, காற்றால் அலைப்புண்ட கடலலையின் ஒலி போல் ஒலித்தது. கோயில்களிலிருந்து எழும் பலவகை வாத்தியங்களின் ஒலிகளைக் கேட்டு மக்கள் மனமகிழ்ந்து ஆரவாரம் செய்தனர்.

விழாக்களுக்காகக் கட்டப்பட்ட கொடிகளும் பகைவரை வென்றமைக்கு அடையாளமாகக் கட்டப்பட்ட வெற்றிக் கொடிகளும், கடைகளில் கட்டப்பட்ட விற்பனை அடையாளக் கொடிகளும், உயரப் பறந்தவாறு, ஒரே கொடிகள் மயமாக அணி செய்தன. யானைகள் செல்லும் தெருக்களிலும், பெண்கள் செல்லும் வீதிகளிலும் கஸ்தூரி மணம் கமழ்ந்தது.51

தமிழ் நிலைபெற்ற தாங்கரு மரபின்
மகிழ்நனை மறுகின் மதுரை52

என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. நச்சினார்க்கினியர் இதற்கு விளக்கம் கூறும்போது “தமிழ் வீற்றிருந்த தெருவினை யுடைய மதுரை” “ என்கிறார்.