பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


யானைகளுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கும் வீரர்களையும் குதிரைகளைத் தேரிற்பூட்டி விரைந்து செத்துலும் வீரர்களையும், சிறுமியர் கட்டிய மணல் வீடுகளை அழிக்கும் தேரோட்டுகிற அரசிளங்குமரரையும் வீதிகளில் காண முடிந்தது. அதனால் சினமுற்ற சிறுமியர் அறுத்தெறிந்த முத்துக்களால் வீதியின் தேரோட்டமே தடைப்பட்டது.66

வழிவழியாக அறநெறி பிறழாது ஆட்சி நடத்தும் பாண்டியப் பேரரசர்களது எழுநிலை மாடங்களை உடைய அரண்மனை, நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருந்தன. ஈசானிய (வடகிழக்கு) திசையில் மாளிகை அமைப்பது சிறப்பு என்னும் மனைநூல் மரபு இங்கு ஒப்பு நோக்கிக் காணத்தக்கது. “ மக்களும் மன்னரும் மனை நூல் மரபுகளைக் கடைப்பிடித்தே கட்டடங்களைக் கட்டியும், நகரமைத்தும் வந்துள்ளமை புரிகிறது.

மதுரைக் கோயில்கள்

இக்கால மதுரைக்குக் கோயில் மாநகரமென்றே ஒரு பெயர் உண்டு. பழங்கால மதுரையும் அவ்வாறே கோயில் மாநகராக அமைந்திருந்தது. சிலப்பதிகார ஊர்காண் காதையில்,

நுதல் விழிநாட்டத் திறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோ னியமலமும்
மேழி வலனுயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும்
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்67

என்று வருகிறது. நகரின் உரிமைத் தெய்வமாக மதுராபதி கூறப்படுகிறாள்.68 ஐயை கோயில் என ஒன்றும் கூறப்படுகிறது.69

சிவபெருமான் திருக்கோயிலும், கருடக் கொடி உயர்த்திய திருமால் கோயிலும், மேழிப்படையை