பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்

5. அறிவியல்-தொழில் துணுக்க விளைவுகள் (Scientific and technological impact)

6. தட்ப வெப்பக் கூறுபாடுகள் (Climatological factors)

தமிழில் மரபுவழியே எண்ணப்படும் அறுபத்து நான்கு கலைகளில், சிற்ப சாஸ்திரம், வாஸ்து வித்தை ஆகிய இரண்டும் கட்டடக் கலை தொடர்பானவை. நகரமைப்புக் கலையும், உள்முக அணி செயல்வகையும் (Interior decoration) தமிழர் வாழ்வில் தொன்று தொட்டுப் பழகியவை என்பதை மிகப் பொதுவான மேற்கோள் ஆட்சியிலிருந்து கூடக் காணலாம். ஒரு நூலுக்குப் பாயிரம் இன்றியமையாதது என்பதை விளக்குங்காலையில் 'மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்... போல்' என்று நன்னூலின் தொடக்கப்பகுதி அமைந்துள்ளது.5

பெரு நகரங்கள் என்ற பிரிவில் காவிரிப்பூம்பட்டினம் என்ற பூம்புகார் கடல் சார்ந்தது. மதுரை நிலம் சார்ந்த எல்லைகளை உடையது. வஞ்சி மாநகர் மலை கடல் சார்ந்த எல்லைகளை உடையது. இம்மூன்று நகரங்களின் அமைப்புக்களைப் பற்றி ஆராயும்போது மூவகையான சுற்றுப்புறச் சூழல் வாய்க்கப் பெற்ற நகரங்களை அமைப்பு முறைப்படி அறிய முடிகிறது.

இம்மூன்று நகரங்கள் தவிர வேறு சில நகரங்களையும் ஆராய இடமுண்டு எனினும் இவற்றைப் பற்றி ஆய்வதில் ஒரு பொருத்தமும் உண்டு.

சேர சோழ பாண்டியர் மூவர்தம் பெருநகரங்களையும் அடுத்தடுத்து ஆய்கிற வாய்ப்பு முறையும் இதன் மூலம் கிடைத்துவிடுகிறது. மூன்று நகரங்களில் பூம்புகாரும் வஞ்சியும் துறைமுகப்பட்டினங்கள். மதுரை மாநகர் துறைமுகப்பட்டினமல்ல. என்றாலும் நான்மாடக் கூடல் என்ற திருவிளையாடல் வரலாறு தவிரப் பலதுறை அறிவு