பக்கம்:பழைய கணக்கு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

நிபந்தன. கதைகள் அவ்வளவையும் நானே படிக்க முடியாது. முதலில் நீ படித்து நல்ல கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் உதவி செய்வதாயிருந்தால் நான் சம்மதிக்கிறேன்” என்றார் வ. ரா.

கல்கியிடம் இதைச் சொன்ன போது, “சரி, போட்டிக் கதைகள் வந்தவுடன் அவர் விருப்பப்படி அவற்றை எடுத்துக் கொண்டு போய் நீயே கதைகளே வாசித்துக் காட்டு!” என்றார், ஒரு மாத காலம் வ. ரா. வீட்டுக்கு தினம் தவறாமல் ஞாயிற்றுக்கிழமை உட்பட போய்க் கதைகள் முழுதும் படித்துக் கொடுத்தேன். அந்த முப்பது நாளும் வ.ரா. வீட்டில்தான் எனக்குச் சாப்பாடு. முருங்கைக்காயைத் தோல் சீவி சாம்பாரில் போடும் புதுமையை அவர்கள் வீட்டில்தான் பார்த்தேன். வ. ரா. வுக்கு முருங்கைக்காய் சாம்பார் ரொம்பப் பிடிக்கும்.

ஒரு நாள் வ. ரா. என்னிடம், “டேய், இந்த நீதிபதி வேலைக்காக கல்கி எனக்குப் பணம் கொடுப்பார் என்று நினைக்கிறேன். நீதானே இவ்வளவு கதைகளையும் எனக்குப் படித்து உதவி செய்தாய். ஆகையால் அந்தப் பணத்தில் உனக்கு நான் நூறு ரூபாய் தரப் போகிறேன். ஆகையால் தீபாவளிச் செலவுக்கு உன்னிடம் நூறு ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள்” என்றார். கதைகள் அவ்வளவும் படித்து முடித்ததும் கல்கி ஆசிரியர் வ. ரா.வுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கமாகக் கொடுத்தனுப்பினர். அந்தப் பணத்தை நான்தான் கொண்டுபோய்க் கொடுத்தேன். வ.ரா. நோட்டுக்களை எண்ணிப் பார்த்து விட்டு, “என்னடா நூறு ரூபாய் குறைகிறதே?” என்றார்.

“நீங்கள் ஏற்கனவே வாக்களித்த நூறு ரூபாயை நான் எடுத்துக் கொண்டு விட்டேன். கொஞ்சம் அவசரமாகத் தேவைப்பட்டது” என்றேன்.

“நான் உனக்குப் பணம் தருவதாகச் சொன்னது உண்மை. ஆனால் நீயே அதை எடுத்துக் கொண்டது தப்பு” என்றார் வா. ரா.

பைத்தியக்காரன் விமரிசனத்துக்காக நூறு ரூபாய் அவராகவே கொடுக்க முன்வந்த போது அதை நான் வாங்காமல் இருந்து விட்டேன். ஆனால் கதை படித்ததற்காக அவர் கொடுப்பதாக வாக்களித்த பணத்தை நானே எடுத்துக் கொண்டு விட்டேன். தீபாவளிச் செலவுக்கு உன்னிடம் நூறு ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள்” என்று வ.ரா. முன் கூட்டியே சொல்லி விட்டதால் அந்த நூறு ரூபாயை நானாகவே எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று கருதி விட்டேன். ஆனாலும் அது தவறு என்பதை வ. ரா. சுட்டிக் காட்டியபோதுதான் உணர்ந்தேன். அப்புறம் வெகு நாள்வரை அது என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/18&oldid=1145669" இலிருந்து மீள்விக்கப்பட்டது