பக்கம்:பழைய கணக்கு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

வருவது தெரிந்ததும் உம்மைக் கூப்பிட்டு ஆனந்த விகடனிலேயே வேலை தந்தாலும் தரலாம்” என்றார் அவர்.

‘கத்தரி விகடன்’ வெளியாவது பற்றி ஹநுமானில் பெரிதாக விளம்பரப் படுத்தினேன். விளம்பர சார்ஜ் பின்னால் கொடுப்பதென்று ஏற்பாடு.

அப்போதெல்லாம் மாலை நேரங்களில் நானும் தி. ஜ. ர. வும் தம்புச் செட்டித் தெருவிலுள்ள எங்கள் ஓட்டல் அறையிலிருந்து நடந்தே சென்று ஹைகோர்ட் காம்பவுண்டுக்குள் மர நிழலில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது வழக்கம். ஒரு நாள் அப்படிப் போய்க் கொண்டிருந்த எனக்குப் பின்னால் மிக நெருக்கத்தில் சைக்கிள் மணியோசை கேட்டது. ஆனந்தவிகடனில் ப்யூனாக இருந்த முனுசாமி என்பவர் சைக்கிளை நிறுத்தி இறங்கி என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.

“ஆசிரியர் கல்கி உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனே வந்து பார்க்கவும்” என்று அதில் எழுதப்பட்டிருந்தது. கீழே தேவன் கையெழுத்துப் போட்டிருந்தார். தி. ஜ. ர.வின் எதிர்பார்ப்பு உண்மையாகி விடும் போல் தோன்றியது!

மறுநாள் காலை நான் விகடன் அலுவலகத்துக்குப் போய் ‘கல்கி’ அவர்களைச் சந்தித்தேன். இதில் வேடிக்கை என்ன வென்றால் அதற்கு ஒரு வாரம் முன்புதான் நான் வேறு பத்திரிகைகளில் பிரசுரமான எனது கட்டுரைகளின் தொகுப்போடு அவரிடம் போய் வேலை கேட்டேன். அப்போது அவர் என் கதைகளைப் புரட்டிப் பார்த்து விட்டு, “இதெல்லாம் ஒன்றும் சரியாக இல்லை. இப்போது வேலை எதுவும் இல்லை. பிறகு பார்க்கலாம், போய் வா” என்று கூறித் திருப்பி அனுப்பி விட்டார்.

இப்போது கல்கி என்னைப் பார்த்ததும், “நீதான!” என்று கேட்டார்.

“ஏதோ புதுப் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறயாமே!”

"ஆமாம்.”

“யார் பணம் போடப் போகிறார்கள்?”

“எனக்குத் தெரிந்த பணக்காரர் ஒருவர்.”

“அவர் பணத்தை எங்கே போடப் போகிறார்? குளத்திலா”

சிறிது நேர மெளனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழைய_கணக்கு.pdf/93&oldid=1146038" இலிருந்து மீள்விக்கப்பட்டது