உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பவழபஸ்பம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஸ்பம்

19

என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, தேரும் திருவிழாவும், அபிஷேகமும் ஆராதனையும் பழைய கடவுளருக்குச் செய்து, 'பக்தர்' கோலத்தைக் காட்டினர், பலர், வெண்ணிலா வேலுடையான் கோயிலுக்கு நடத்திய உலா உற்சவம், நவகோடியாரின் அடிவயிற்றைக் கலக்கிவிட்டது—அவ்வளவு பெரும் செலவு—வெண்ணிலாவுக்கு ஊர்ப்பிரமுகர்கள், உயர் குடும்பத்தினரின் புகழ்மாலை கிடைத்தது! வெண்ணிலாவின் 'பக்தி' ஒளி குறித்து அரண்மனையிலும் பேசப்பட்டது. நவகோடியாருக்கு வர இருந்த ஆபத்தை நீக்கிவிட்டதாக வெண்ணிலா கருதி மகிழ்ந்தாள்—ஆனால், வேல் பாய்வது போலச் சேதி வந்தது, மருதவல்லியின் மாஜி கணவன் என்ற காரணம் காட்டி நவகோடியாரையும் மன்னன் குற்றம் சாட்டப் போகிறான் என்று தெரிந்தது. வெண்ணிலா விம்மினாள்.

"கடுகடுத்த முகமல்லவா காட்டினாய், கள்ளீ! காவி உடைக்கு ஏற்றபடி நடந்துகொள் என்று ஏசினாயே! உன் கண்கள் கமலம் என்றேன், பவளம் உன் அதரம் என்றேன், முத்துப் பற்கள் என்றேன். செந்தேனே! என்றேன்—ஆண்டிக்கு ஆகாது இந்தக் காரியம் என்றல்லவா, அன்று சொன்னாய். அறிவிலி! அன்று நான் ஆலயத்துக்கு மலர் தொடுத்து அளிப்பவனாக இருந்தேன் என்கிற அலட்சியம்தானே உனக்கு! இன்று நான் மார்க்க விசாரணைக்கூடத் தலைவனாகிவிட்டேன். காலடி வீழ்கிறாய், அல்லவா? உன் மயக்கு மொழிக்கு நான் வீழ்வேன் என்று எண்ணாதே. நவகோடி கிடைத்து விட்டான் என்ற மண்டைக் கர்வத்தில், இருந்தாய். படு! படு! அவன் சொத்துப் பறிமுதலாகும்! அவனுடன் இருந்த உனக்கும் சிறைதான்! சிரிக்கவும் தைரியம் வருகிறதே உனக்கு! இந்தச் சாகசத்துக்கு. நான் பலியாகமாட்டேன் மோகனப் பார்வையைக் கண்டு நான் ஏமாறமாட்டேன்! ஏ ! வெண்ணிலா! சற்று விலகியே நில்! ஆடை நெகிழ்ந்தால், என் உறுதி ஒன்றும் கவிழ்ந்துவிடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பவழபஸ்பம்.pdf/20&oldid=1638505" இலிருந்து மீள்விக்கப்பட்டது