உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

153

அவையடக்கம்
(கொச்சகக்கலி)

அலைபரந்து கரைமோத அடர்தாழை நீள்புன்னைத்
தலைபரந்து பூச்சொரியும் தமிழகத்துப் பெருநாட்டின்
மலைபரந்து புகழ்சேர்க்கும் மாக்கவிஞர் உறைவிடமாம்
கலைபரந்து நனிசிறக்கும் கற்றோர்வாழ் புதுவை நகர்!

போதேதோ இல்லாத பொய்கையினைப் போன்றவர்கள்
ஏதேதோ பாடிடுவர்; எங்கிருந்தோ வந்திடுவர்;
காதேதோ கேளாத கருத்துடையார் ஆயினுமே
கோதேதும் காணாது கொண்டணைக்கும் புதுவைநகர்!

கையேந்தார் இல்லையெனில்கருத்தேந்தார் இல்லையிங்கே!
பொய்யேத்தார் இல்லையெனில் புகழேந்தார் இல்லையிங்கே!
மையேந்தார் இல்லையெனில் வாழ்வேந்தார் இல்லையிங்கே!
தையேந்தார் இல்லையெனில் தமிழ்ஏந்தும் புதுவை நகர்!

தன்மானம் உண்டிங்கே! தலை தாழ்த்தல் இலையிங்கே!
பொன்மானம் உண்டிங்கே! புன்செயலோ இலையிங்கே!
கன்மானம் உண்டிங்கே! கய்வர்வாழ் விலையிங்கே!
பண்மானம் உண்டிங்கே! பண்பேந்து புதுவை நகர்!

வாழ்கின்ற சான்றோரே! வந்துள்ள தாய்மாரே!
சூழ்ந்துள்ள தோழர்காளே! எதிர்காலக் குழந்தைகளே!
ஆழ்ந்தறிந்து தீந்தமிழில் அடலேறாம் இராவணனின்
வாழ்புகழைப் பாட்டிசைக்க வந்துள்ள இளங்கவிகாள்!

கொச்சகப்பாப் பாடியிங்கே கும்பிட்டுக் கேட்கின்றேன்
பச்சைப்ப சுந்தமிழன் தன்மானப் பாசறையான்!
அச்சத்தை என்றென்றும் அறியாத இராவணனின்

மெச்சுபுகழ் பாடுமவை வீற்றிருந்து கேட்பீரே!