பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. அன்பு

(இன்னிசைக் கலிவெண்பா)

‘இன்பம் பெருக்கி, நம் இல்வாழ்க்கை செப்பனிடும்
அன்பை விளக்கி அழகாகப் பா(டு)’ என்ற
அன்பே! எனதுடலின் ஆவியே! கேட்பாய் நீ!
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை பாழாம்!
கடல்வற்றி, நெய்தற் கழிவற்றிப் பாசி
படர்ந்த இடமெல்லாம் பச்சை குலுங்க
உயிர்தோன்றி, அந்த உயிரின் இணையால்
உயிரிதோன்றி வந்த உயிரினத்தின் ஊடன்றே
அன்பு பிறந்ததடி! அன்பே அதுமுதலாய்
என்புதோல் போர்த்த உடலுயிரில் நின்றதுவே!
என்னின்பத் தீந்தமிழே இல்லாளே! வீட்டரசி!
‘அன்பின் வழிய துயிர் நிலை; அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்(பு)’ என் றுரைத்தநம்
மன்புலவன் வள்ளுவனின் வாய்மை மொழியேபோல்
நீர்தேக்கி, நன்செய் நில்புலத்தை உண்டாக்கி,
ஊராக்கி, ஊருக் கரணமைத்தே, அவ்வூரைச்
சீராக்கி, வாழச் செழுமை பலவாக்கித்
தேரோடு யானை செழுங்குதிரை காலாளும்
போராட, மக்கள் புகழ்பாடத் தீந்தமிழைக்
காராடு வானம் கவிழ்ந்த உலகினிலே
எண்ணி வியக்க; இயலிசையைக் கூத்தையிங்குப்
பண்ணாய்த்த மேலோர் படைத்ததுவும் அன்பேயாம்!
தென்னையிலே காக்கைக் கருங்குஞ்சு செவ்வாயை
முன் திறக்கத் தாய்ப்பறவை மூக்கைவிட்டு வாயுள்ளே