பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

605


மங்கலத்துப் பெண்னே! நாராயணன் சேந்தன் வந்தால் கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக்கொண்டு போய் விட்டான்’ என்று சொல்லிவிடு!” என்று பகவதி கூறிச் சென்ற சொற்கள் குழல்வாய்மொழியின் உள்ளத்தைக் கொதிக்க வைத்தன. ‘ஏமாற்றப்பட்டோம் என்று நினைக்கும் போது குழல் வாய்மொழிக்கு வேதனையாக இருந்தது.

கட்டிலோடு கட்டியிருந்த கட்டுக்களை நெகிழ்க்க முயன்றாள் முடியவில்லை. அரை நாழிகைக்குப் பின் சேந்தன் தூக்கம் கலைந்து எழுந்த சோர்வோடு கொட்டாவி விட்டுக் கொண்டே கீழ்த்தளத்துக்கு வந்தான். அங்கே குழல்வாய்மொழி இருந்த நிலையைப் பார்த்ததும் பெரியதாகக் கூக்குரலிட நா எழுந்தது அவனுக்கு. அதை வலுவில் அடக்கிக் கொண்டு, கட்டுக்களை அவிழ்த்துத் தன் நினைவற்றுத் துவண்டு கிடந்த குழல்வாய்மொழிக்கு மூர்ச்சை தெளிவித்தான். நிதானமாகஆனால் கலவரமுற்ற மனத்தோடு “என்ன நடந்தது?’ என்று அவளிடம் கேட்டான். அவள் கோ வென்று வாய்விட்டுக் கதறி அழுதுவிட்டாள். அவன் அழுகையைத் தணித்து ஆறுதல் கூறி மெல்ல நடந்ததை அறிந்தான் சேந்தன். ‘கூத்தன் தன்னுடைய கூத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டுவிட்டான்” என்று அவள் அதைச் சொல்லி முடித்தபோது, “எனக்கு அப்போதே தெரியும் !” என்று சர்வ சாதாரணமாகச் சொன்னான் சேந்தன்.


6. பொல்லாத மழைப் புயல்

சிக்கசேனாபதி வந்து கூறிய செய்தியைக் கேட்டதும் குமாரபாண்டியனின் மனத்தில் உணர்ச்சியலைகள் மேலெழுந்து பொங்கின. தமனன் தோட்டத்துத் துறையில் ஈழ நாட்டுக் கடற்படை வீரர்களால் கைப்பற்றப்பட்டிருக்கும் கப்பல் யாருடையதாக இருக்கும் அதில் வந்திருப்பவர்கள் யாராயிருப்பார்கள்?’ என்ற சந்தேகம் அவன் நினைவுகளை வளர்த்தது.