பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/655

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

653


மற்றவர்களையும் உடன் சேர்த்துக் கொண்டார். அவர்கள் உடன் வரவேண்டாம் என்று எண்ணியும் மகாமண்டலேசுவரரால் அதைத் தடுக்க முடியவில்லை.


13. குமாரபாண்டியன் வந்தான்

இறந்துபோன் பெண் பகவதிதான் என்ற உண்மையைத் தெரிந்து தாங்கிக்கொள்வது கடினமாயிருந்தது குமார பாண்டியனுக்கு ஏற்றுக் கொள்ளமுடியாத அந்தத் துயர உண்மையிலிருந்து மீள வழியறியாது தவித்தான் அவன். கப்பல் வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. தளத்தில் அவனருகே குழல்வாய்மொழியும் சேந்தனும், மெளனமே உருவாய்க் கன்னத்தில் கையூன்றி வீற்றிருந்தனர்.

“தளபதிக்கு முன்னால் எந்த முகத்தோடு போய் நிற்பேன்! இப்படி அநியாயமாக அந்தப் பெண் இறக்கும்படி நேரிட்டுவிட்டதே போரும், படையெடுப்பும் ஏற்பட்டுத் தளபதியின் ஊக்கமும் உற்சாகமும் நன்றாகப் பயன்பட வேண்டிய சமயத்தில் இந்தச் செய்தியைப் போய்ச் சொன்னால் அவனுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் மட்டும் கவனமாக இருந்திருந்தால் அந்தப் பெண் கப்பலிலிருந்து தப்பி ஓடி இப்படித் துர்மரணமடைந்திராமல் தவிர்த்திருக்க முடியும்” என்று சேந்தனையும் குழல்வாய்மொழியையும் நோக்கித் துக்கத்தோடு சொன்னான் இராசசிம்மன். துயர வேதனையினால் பேசும்போது தொண்டை தடுமாறி நாக் குழறியது அவனுக்கு.

“இளவரசே! நாங்கள் என்ன செய்யமுடியும்? எங்களைக் கேட்டுக் கொண்டா அந்தப் பெண் இந்தக் காரியங்களைச் செய்தாள்? அவளுடைய முரட்டுத்தனம் அவளுக்கே அழிவைத் தேடிக் கொடுத்து விட்டது. விழிஞத்தில் அந்தப் பெண் ஆண் வேடத்தோடு வந்தபோதே சந்தேகப்பட்டுக் கப்பலில் இடங்கொடுக்க மறுத்தேன் நான். மகாமண்டலேசுவரருடைய திருப்புதல்வியாரின் நல்ல மனத்தால் கப்பலில் இடம்பெற்றுத் தன் பெயர் கூத்தனென்று பொய் கூறி நடித்தாள் அந்தப் பெண்.