பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

673


தலைநிமிர முடியாமல் செய்துவந்த அறிவின் பரம்பரையைப் பூண்டோடு அழித்தே விடப்போகிறேன், பாருங்கள்!” என்று கூப்பாடு போட்டுக்கொண்டு கீழே குனிந்து வலது கையால் ஒரு பிடி மண்ணை அள்ளிக் காற்றில் தூவினான் தளபதி. குழைக்காதன் பயத்தோடு பார்த்துக் கொண்டு நின்றான். தளபதியின் வெறியை என்ன கூறி எப்படி ஆற்றுவதென்றே அவனுக்கு விளங்கவில்லை. மூட்டாத காலக்கடைத் தீயாக, ஊழி நெருப்பாக, உக்கிராகாரமான கொதிப்பின் கம்பீர பிம்பமாக எழுந்து நின்றான் தளபதி.

“மகாசேனாபதி! இந்த அழிக்கும் வேலையில் நம்மோடு ஒத்துழைப்பதற்கு வேறு மனிதர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் சந்தித்து நம்மோடு சேர்த்துக் கொள்ளலாமோ?” என்று அருகில் நெருங்குவதற்குப் பயந்து கொண்டே மெதுவாகக் கேட்டான் குழைக்காதன்.

“யார் அவர்கள்?”

“கழற்கால் மாறனாரும் அவரைச் சேர்ந்தவர்களும்.”

“எங்கே சந்திக்கலாம் அவர்களை ?”

“பொன்மனைக்குப் போனால் அவர்களைச் சந்திக்கலாம்!”

“புறப்படுங்கள் பொன்மனைக்கு!”

தளபதி வேகமாக நடந்தான். குழைக்காதனும் பின்பற்றினான். காட்டு எல்லை கடந்து மக்கள் பழக்கம் மிகுந்த இடம் வந்ததும் தங்கள் தோற்றங்களைப் பிறர் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள இயலாதபடி மாற்றிக் கொண்டு பொன்மனைக்கு விரைந்தனர் இருவரும். போது நன்றாக விடிந்து விட்டது. பகல் பவனிவரத் தொடங்கி யிருந்தது அப்போது.


16. ‘வாகை சூடி வருக!’

விழிளுத்து அரச மாளிகையில் உட்கார்ந்திருந்த அந்த நேரத்தில் கடல். கடந்து பயணம் செய்தபோது தனக்கும், சேந்தனுக்கும் ஏற்பட்ட அனுபவங்களையெல்லாம் மகாராணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் குழல்வாய்மொழி. பகவதி மாறுவேடத்தில் உடன்வந்தது, கப்பலிலிருந்து தப்பியோடி