பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


கல் அவர் மண்டையை உடைத்து நொறுக்கியிருந்தால் எனக்குத் திருப்தியாயிருக்கும். மகுடத்தைக் கீழே தள்ளியதோடு போய்விட்டதே!” என்று சோக வெடிப்பில் உண்டான கோபத்தோடு சொன்னான் குழைக்காதன்.

அதுகாறும் பொங்கி எழும் அழுகையோடு சோகத்தில் துவண்டுபோய் வீற்றிருந்த மாவீரன் வல்லாளதேவன் திடீரென்று ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவன்போல் எழுந்து நின்றான். அழுகை ஒய்ந்தது. கண்ணிரைத் துடைத்துக் கொண்டான். முகத்தில் வைரம் பாய்ந்த உணர்ச்சி ஒன்று கால்கொண்டு பரவியது. கண்களில் பழிவாங்கத் துடிக்கும் உணர்வொளி மின்னியது. முகம் சிவந்து, மீசையும் உதடுகளும் துடித்தன. ஆவேசமுற்ற வெறியாட்டக்காரன்போல் விறைப்பாக நின்றுகொண்டு சூளுரைத்தான் அவன். .

‘குழைக்காதரே! இந்தக் கணத்திலிருந்து நான் அயோக்கியனாக மாறப்போகிறேன். கடமை, நன்றி, நியாயம், அறம் இவைகளைப்பற்றி நான் இனிமேல் கவலைப்படப் போவதில்லை. கருணையும், அன்பும், எனக்கு இனிமேல் தேவையில்லை. அவைகளை நான் யார்மேல் செலுத்த முடியுமோ, அந்த அருமைச் சகோதரி போய்விட்டாள். என் ஒரே உறவு அழிந்துவிட்டது. இல்லை ! சூழ்ச்சியால் அழிக்கப்பட்டு விட்டது. என் உடன்பிறந்த இரத்தம் துடிக்கிறது. பறி கொடுத்த மனம் பதறுகிறது. இனி எல்லோரும் எனக்கு வேண்டியவரில்லை. நான் இரத்தப் பசி, மிகுந்த கோர ராட்சசனாக உருவெடுக்கப்போகிறேன். ஞானிக்குத் துன்பம் வந்தால் அதே மாதிரித் துன்பம் பிறருக்கு வராமல் காப்பான். முரடனுக்கு ஒரு துன்பம் வந்தால் ஆயிரம் பேருக்கு ஆயிரக்கணக்கானதுன்பங்களை விளைவிப்பான். நான் முரடன். எனக்கு எதிரி மகா மண்டலேசுவரர் ஒருவர் மட்டும் இல்லை. மகாராணி, இளவரசர், அந்தக் குட்டைச் சேந்தன், மகாமண்டலேசுவரரின் பெண், இந்த நாடு, இந்தத் துன்பத்தை எனக்கு அளித்த எதிரிகளின் தலையாய விதி என்னும் எதிரிஎல்லோரையும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கப் போகிறேன் நான் என் தங்கைக்கு இல்லாத உயிரும் வாழ்வும் எவருக்கும் இல்லாமல் செய்துவிடப் போகிறேன். என்னை இதுவரையில்