பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

726

பாண்டிமாதேவி / மூன்றாம் பாகம்


குதிரை கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. அவன் வெளியே வந்து ஏறிக்கொண்டான். “சக்கசேனாபதி! வருகிறேன். விதி இருந்தால் சந்தித்து வெற்றி பெறுவோம்” என்று பாசறை வாயிலில் நின்ற அவரிடம் கூறி விடைபெற்றுக்கொண்டு குதிரையைச் செலுத்தி இருளில் மறைந்தான் குமார பாண்டியன்.


23. மாதேவியின் கண்ணிர்

மகாமண்டலேசுவரரைப் பற்றி யார் சொல்லியும் அதை நம்பாமல் பொழுதுவிடிந்ததும் இடையாற்று மங்கலத்துக்குப் புறப்படுவதற்கிருந்த மகாராணி, அப்படிப் புறப்பட வேண்டிய அவசியமே இல்லாமற் போய்விட்டது. பொறிகலங்க வைக்கும்படியான அந்தச் செய்தியைக் கேட்டவுடன் மகாராணி வானவன்மாதேவி மூர்ச்சையாகி விழுந்து விட்டார். பலவித மனக் குழப்பங்களாலும், முதல் நாளிரவு நன்றாக உறக்கம் வராததாலும், தளர்ந்து போயிருந்த அவருக்கு அந்தச் செய்தியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

“இடையாற்றுமங்கலத்தையும், அதைச் சுற்றியுள்ள அழகான இடங்களையும் கலகக்காரர்கள் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டார்கள். முதல் நாள் இரவு முழுவதும் மகாமண்டலேசுவரர் யார் கையிலும் அகப்படவில்லையாம். காலையில் இடையாற்று மங்கலத்துச் சிவன் கோவில் குறட்டில் அவர் இறந்து கிடப்பதைக் கண்டார்களாம்” என்று கேள்விப்பட்ட இந்தச் செய்திதான் மகாராணியை மூர்ச்சையாகும்படி செய்துவிட்டது.

புவனமோகினியும், விலாசினியும், மகாராணியின் உடலைத் தாங்கிக் கொண்டு மூர்ச்சை தெளிந்து நினைவு வருவதற்கேற்ற சைத்தியோபசாரங்களைச் செய்தனர். பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் கவலையோடு நின்றுகொண்டிருந்தார்கள்.