பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

99


இங்கே மணியகாரனாக இருக்கும் இந்த அண்டராதித்த வைணவன் வேறு யாருமில்லை. நம்முடைய சாட்சாத் நாராயணன் சேந்தனின் சொந்தத் திருத்தமையன்தான். முன் சிறைத் தர்மசாலையின் எல்லா நிர்வாகப் பொறுப்புக்களும் இவன் கையில் தான். ஆனால் இவனையும், இவனுடைய நிர்வாகங்களையும் மொத்தமாகச் சேர்த்து மேய்க்கும் பொறுப்பு இவனுடைய மனைவியான கோதை நாச்சியாரிடம் இருந்தது.

தன் தம்பி மகாமண்டலேசுவரரிடம் மிக முக்கியமான பதவியை வகிக்கிறான் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதில் அண்டராதித்த வைணவனுக்குத் தனிப் பெருமை. தன் மனைவி எப்போதாவது தன்னைக் கண்டிப்பது போல் இரைந்து பேசினால் அவள் வாயை அடக்குவதற்கு அவன் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரமும் இதுதான்.

“இந்தா, கோதை! என் தம்பி இந்தத் தென்பாண்டி மகாமண்டலேசுவரருக்கு எவ்வளவு அந்தரங்கமானவன் தெரியுமா? அவன் இல்லாவிட்டால் அவருக்கு ஒரு காரியமும் ஓடாது. அவன் சுட்டு விரலை அசைத்தால் போதும், பெரிய பெரிய காரியங்களைச் சாதித்துவிடுவான். அப்படிப்பட்டவனுக்கு மூத்தவனாகப் பிறந்துவிட்டு நான் உன்னிடம் மாட்டிக்கொண்டு இந்தப் பாடுபடுகிறேனே!” என்று தன் மனைவியிடம் கூறுவான் அண்டராதித்த வைணவன்.

“ஏன் சும்மா இருக்கிறீர்களாம்? உங்கள் தம்பியிடம் சொல்லிச் சுட்டு விரலை ஆட்டச் செய்து என்னையும் அடக்குவதுதானே?’ என்பாள் அவள்.

இந்த வேடிக்கைத் தம்பதிகளால் அந்தச் சத்திரத்து நிர்வாகம் குறைவில்லாமல் நடந்து வந்தது. இவர்களுடைய பேச்சும் சிரிப்பும் அங்கே வந்து செல்லும் நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவை. மூத்தவனான அண்டராதித்த வைணவனுக்கும், இளையவனான நாராயணன் சேந்தனுக்கும் சுபாவத்தில் நிறைய ஏற்றத்