பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

101


“இதோ பார், தாயே! பரதேவதை! உனக்குக் கோடிப்புண்ணியம் உண்டு! வருகிறவர்களுக்கு முன் என் மானத்தை வாங்காதே. தயவு செய்து உள்ளே போ, கோதை” என்று அவள் அருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில் கெஞ்சினான் அவன்.

“ஆள் இனம் தெரியாமல் கண்டவர்களுக்கெல்லாம் சத்திரத்தில் தங்க இடம் கொடுக்காதீர்கள். சத்திரத்துப் பொருள்கள் அடிக்கடி மாயமாக மறைந்து விடுகின்றன. களவு போவதற்கு இடம் கொடுப்பது உங்களால் வருகிற வினைதான்!” என்று உரிமையோடு கணவனை எச்சரித்து விட்டு உட்புறம் இருட்டில் மறைந்தாள் கோதை நாச்சியார்.

“ஐயா! இதுதானே முன்சிறை அறக்கோட்டம்?” உள்ளே செல்லும் மனைவியின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற அண்டராதித்த வைணவன் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பரபரப்படைந்து திரும்பிப் பார்த்தான்.

சத்திரத்து வாசற்படியில் பருத்த தோற்றத்தையுடைய மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கையிலிருந்த தீப்பந்தத்தை அவர்கள் முகத்துக்கு நேரே பிடித்துப் பார்த்த அண்டராதித்தன், ‘உங்களுக்கு எந்த தேசம் ? என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’ என்று வினவினான் மூவரையும் பார்த்து.

‘முதலில் நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!”

அதிகாரம், அல்லது அதையும் மிஞ்சிய கடுமை அவர்களுடைய குரலில் ஒலித்ததைக் கேட்டு அண்டராதித்தன் சிறிது சினமடைந்தான்.

முதலாவதாக அவர்களுடைய தோற்றமே அவன் மனத்தில் நல்ல எண்ணத்தை உண்டாக்கவில்லை. காளிகோவில் பூசாரிகள் உடுத்துக் கொள்வது போன்று இரத்த நிறச் சிவப்புத் துணியில் தலைப்பாகையும், அமைதி இல்லாமல் நாற்புறமும் சுழலும் விழிப் பார்வையுமாகச் சத்திரத்து அதிகாரியான தன்னிடமே அதிகாரம் செய்து கேள்வி கேட்கும் அவர்கள் யாராயிருக்கலாம் என்று