பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

பாண்டிமாதேவி / முதல் பாகம்


எண்ணியவாறு முகத்தைச் சுளித்து அவர்களைப் பார்த்தான் அவன்.

‘அடேடே இவன் என்ன நம்மை இப்படிக் கடுமையாகப் பார்க்கிறான்? காமனையும், நக்கீரனையும் நெற்றிக் கண்ணால் எரித்து வாட்டிய சிவபெருமான் என்று எண்ணம் போலிருக்கிறது இவனுக்கு” என்று வந்தவர்களில் ஒருவன் தன் பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் எகத்தாளமாகக் கேட்டான்.

“அட, அது இல்லை அப்பா ! இந்த மனிதன் நம்மைப் பார்த்ததும் ஊமையாகிவிட்டான்” என்றான் மற்றவன்.

தன் கேள்விக்குப் பதில் சொல்லாமலே தன்னைப் பற்றித் தன் முன்பே அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு போவதைக் கண்டு அண்டராதித்தனின் கைகள் துடித்தன. கையிலிருக்கும் தீப்பந்தத்தால் அந்த மூன்று முரடர்களையும் அப்படியே மூக்கு, முகம் பாராமல் வாங்கு வாங்கென்று வாங்கிவிடலாம் என்று தோன்றியது.

“மரியாதை தெரியாத மனிதர்களுக்கு இங்கே பதில் சொல்கிற வழக்கம் இல்லை” என்று சுடச்சுடப் பதில் கூறினான் அண்டராதித்தன்.

“ஒகோ! இனிமேல் உங்களிடம்தான் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.”

“பண்பாடற்ற தடியர்களுக்கு இந்த நாட்டில் யாரும் எதையும் கற்பிக்க விரும்புவதில்லை.”

இப்படியே பேச்சு முற்றியது. அண்டராதித்தன் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று சொல்ல அறக்கோட்டத்து வாசலில் ஒரே கூப்பாடாகிவிட்டது.

உள்ளே ஒதுங்கி நின்று அந்தக் கூப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டராதித்தனின் மனைவி கோதை நாச்சியார் பொறுமையிழந்து, ‘அது யார் அங்கே வந்திருக்கிறார்கள்? என்ன கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்?” என்று இரைந்து கொண்டே வெளியில் வந்தாள்.