பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

பாண்டிமாதேவி / முதல் பாகம்


பார்க்கப்போனால் எவ்வளவு பயங்கரமானது ? நமது திடமான உள்ளத்தின் நம்பிக்கையையே எரிப்பதுபோல் அல்லவா மகாமண்டலேசுவரர் அந்த ஒலையை எரித்துவிட்டார்! அவருக்கு எவ்வளவு நெஞ்சுரம்? ஒருவேளை அவரே வடதிசைப் பேரரசர்களுக்கு உள் கையைப்போல இருந்துகொண்டு சதி செய்கிறாரோ? அதனால்தான் இந்த ஒலையை மகாராணியாரோ கூற்றத் தலைவர்களோ பார்க்கக் கூடாதென்று எரித்து விட்டாரோ?’

மகாமண்டலேசுவரரைப்பற்றித் தென்பாண்டி நாட்டுத் தளபதி பதவியை ஏற்றுக்கொண்ட நாளிலிருந்து அவனுடைய மனத்தில் தோன்றியிராத சந்தேகங்களெல்லாம் இப்போது ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.

எதை எதையோ நினைத்துக்கொண்டு படுக்கையில் தவித்துக்கொண்டு கிடந்தவன் குபிரென்று வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளி எழுந்தான். அந்த மாளிகையின் இருட்டில் அவனுடைய செவிகள் எந்த ஒலியையோ கூர்ந்து கேட்பதற்கு முயன்றன. அவன் உடலில் நடுக்கமும் ரோமாஞ்சலியும் உண்டாயின. உற்றுக் கேட்டான். இதுவரை இயற்கையாகக் கேட்ட பறளியாற்றுத் தண்ணிர் பாயும் ஓசையோ, சில வண்டுகளின் சப்தமோ அல்ல அது; அவனுடைய கட்டிலுக்கு அடியில் தளத்தின்மேல் யாரோ திடும் திடுமென்று கால்வைத்து நடட்ப்பதுபோலக் கேட்டது. மாளிகைக்கு வெளியே நிலா ஒளி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தாலும், உள்ளே இருட்டாகத்தான் இருந்தது. சாளரங்களெல்லாம் சுவரில் மிக உயரத்தில் இருந்ததனால் உள்ளே ஒளியைத் தரமுடியவில்லை. அந்த அகால வேளையில் இருட்டில் அப்படிப்பட்ட ஓசையைக் கேட்டபோது தன் படுக்கைக்கு எதிரே நிற்கும் பெரிய வடிவுடன் கூடிய தூண்களெல்லாம் கருநெடும் பூதங்களாக மாறிக் கால்பெற்று மெதுவாக நடப்பனபோல ஒரு பயங்கரப் பிரமை உண்டாயிற்று அவனுக்கு.

ஒருவிதமாக இடையிலிருந்து வாளை உருவிக் கையில் வைத்துக்கொண்டு வேகமாக அடித்துக்கொள்ளும் இதயத்துடன் படுக்கையிலிருந்து கீழே இறங்கினான் தளபதி.