பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

109

தயங்கித் தயங்கி அடி எடுத்து வைத்தான். அந்த ஒலி மெல்ல மெல்லத் தேய்ந்து மங்கியது. படுக்கையின் கீழே கேட்ட ஒலி இப்போது மேற்கு நோக்கிச் செல்லுவது போல் திசை மாறியது. அந்த ஒலி கேட்ட இடங்களிலெல்லாம் விருந்தினர் மாளிகையின் தரையே அதிர்வது போல் ஒருவகைச் சலனம் உண்டாயிற்று. வல்லாளதேவனும் பொறுமை இழக்காமல், இருட்டில் தூண்களிலும், படிகளிலும் மோதித் தட்டுத் தடுமாறி விழுந்து கொண்டு அந்த ஒலியைப் பின்பற்றிச் சென்றான்.

மாளிகை முற்றத்தின் கடைசிச் சுவர்வரை அந்த ஒலியைப் பின்தொடர முடிந்தது. அப்பால் முற்றத்துக் கதவைத் திறந்தபோது, கதவு நிலையின் கீழே வாசற்படியைத் தழுவினாற்போல் பறளியாறு பொங்கிப் பெருக்கெடுத்து ஒடிக்கொண்டிருந்தது.

நிலா ஒளியின் மோகன மயக்கத்தில் வானுலகத்து அமுதக் குழம்பே பொங்கிப் பாய்வது போலிருந்த ஆற்றின் அழகை அப்போது அவன் கண்கள் அதுபவிக்க முடியவில்லை.

“இந்த மாளிகையில் இரவு வேளைகளில் ஏதாவது பிசர்சு நடமாட்டம் இருக்குமோ?” என்று முதலில் ஓர் எண்ணம் எழுந்தது. சை! இதென்ன ! சுத்த அசட்டுத்தனமான எண்ணம்? பிசாசாவது நடமாடுகிறதாவது? நாம் தான் இந்த அர்த்தராத்திரிப் பொழுதுக்குமேலே இந்த இருண்ட மாளிகையில் பிசாசுபோல் அலைந்துகொண்டிருக்கிறோம்’ என்று முதலில் தோன்றிய அந்த எண்ணத்தை அழிக்க முயன்றான்.

‘புது இடம்! எவ்வளவு களைப்பாக இருந்தாலும் உறக்கம் வராது’ என்று அவன் நினைத்திருந்தான். அதுவோ வெறும் புது இடமாக மட்டும் இருக்கவில்லை, புதுமைகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த இடமாகவும் இருந்தது.

‘எப்படியாவது இருந்து தொலைந்துவிட்டுப் போகட்டும்; நான் போய்ப் படுக்கையில் புரண்டு இந்த இரவைக் கழித்து விடுகிறேன்’ என்று தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக