பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

111


புரிந்தது. அவன் ஏமாற்றமடைந்தான். அவன் நாராயணன் சேந்தன் வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றானே தவிர, வந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் அவன் நின்று கொண்டிருப்பதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நேரே விருந்தினர் மாளிகையை நோக்கித்தான் அவன் வந்து கொண்டிருக்கிறானென்று வல்லாளதேவன் நினைத்தான்.

ஆனால் மாளிகைக்கு மிகப் பக்கத்தில் வந்ததும், சட்டென்று வலது பக்கமாகத் திரும்பி அங்கிருந்த கொடிமண்டபத்துக்குள் நுழைத்துவிட்டான் நாராயணன் சேந்தான்.

“ஓ! சேந்தா ! இப்படிக் கொஞ்சம் வந்துவிட்டுப் போயேன்!” சொற்கள் நுனி நாவரைக்கும் வந்துவிட்டன. என்ன தோன்றியதோ, தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தளபதி உடனடியாக அடக்கிக்கொண்டுவிட்டான். நின்ற இடத்திலிருந்தே நிலவின் ஒளியில் மரகதக் குன்றமெனக் காட்சியளிக்கும் அந்தக் கொடிமண்டபத்தை நன்றாகப் பார்த்தான் தளபதி. அதற்குள்ளிருந்து முரசடிப்பதுபோல் ஒலி வந்தது.

மல்லிகை, முல்லை, மாதவி ஆகிய கொடிகளை இயற்கையாக அந்த இடத்தில் மரங்களில் படரச்செய்து முற்றிலும் பசுங் கொடிகளாலானதோர் கட்டிடம் போலவே காட்சி தருமாறு அமைக்கப்பட்டிருந்தது லதா மண்டபமெனப்படும் அந்தக் கொடிமண்டபம்.

‘மழைக் குளிரும், ஈரம் மிகுந்திருக்கும் சூழலுமுள்ள அந்தச் சமயத்தில், உலகம் உறங்கும் நடு இரவில் நாராயணன் சேந்தனுக்கு அங்கே என்ன வேலை? பால்போல் நிலா ஒளி பரவியிருக்கும்போது அவனுக்கு விளக்கு எதற்கு? என்று சிந்தித்துத் திகைத்தான் வல்லாளதேவன். ஏ, அப்பா! இந்தக் குள்ளனும், இவனை ஆட்டிவைக்கும் இடையாற்று மங்கலம் நம்பியும் எவ்வளவு மர்மங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இவைகளை முழுவதும் தெரிந்துகொள்வதற்கு வீரமும், வாளும், ஆள்பலமும் மட்டும் போதாது போலிருக்கிறது; அறிவு நுட்பத்தினாலும் சொந்தச்