பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

131

செய்யும் அண்டராதித்தன்-கோதை-இந்தத் தம்பதியின் நகைச்சுவை நிறைந்த சரளமான வேடிக்கைப் பேச்சு.

அதுவும் கோதை பேசத் தொடங்கிவிட்டால் ஒரே கொண்டாட்டம்தான். மடைப்பள்ளியில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள் தங்கள் கைக் காரியங்களையெல்லாம் மறந்து கேட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கோதையின் நகைச்சுவைப் பேச்சு வெள்ளத்தில் மூழ்கியிருந்த பணிப்பெண்கள் ஒரு பெரிய விபரீதமான காரியத்தையே செய்துவிட்டார்கள். அதாவது சர்க்கரைப் பொங்கலில் போடவேண்டிய வெல்லத்தைப் புளிக் குழம்பிலும் புளிக்குழம்பில் போடவேண்டிய உப்பு, காரம் முதலியவற்றைச் சர்க்கரைப் பொங்கலிலும் போட்டுச் சமையல் செய்து வைத்துவிட்டார்கள். அதன் விளைவாக அன்றைக்குச் சத்திரத்தில் சாப்பிட உட்கார்ந்த அத்தனை பேரும் அவதிப்பட்டனர். “இந்தா, கோதை! இனிமேல் மடைப்பள்ளியில் வேலை நடந்துகொண்டிருக்கும்போது பணிப்பெண்களிடம் போய் பேச்சுக் கொடுத்தாயோ தெரியும் சேதி!’ என்று அன்றைக்கு அவளைக் கடுமையாகவும் வேடிக்கையாகவும் எச்சரித்து வைத்தான் அண்டராதித்த வைணவன்.

இதனால் பணிப்பெண்கள் கோதையோடு பேசிக் கொண்டே மடைப்பள்ளி காரியங்களைக் கவனிக்க நேர்ந்தால் உஷாராக வேலை செய்வது வழக்கம். கோதை ஏதோ பேச ஆரம்பித்ததும், “அம்மணி! தயவுசெய்து இப்போது நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் மடைப்பள்ளி வேலைகளை முடித்துவிட்டு வருகிறவரை பொறுத்துக் கொள்ளுங்கள்” என்றார்கள்.

“சரிதான்! நீங்கள் வேலையைக் கவனியுங்கள். நான் போய்ச் சத்திரத்தின் அந்தி விளக்குகளை ஏற்றுகிறேன். இருட்டுகிற சமய்மாகிவிட்டது” என்று கூறிவிட்டு மடைப்பள்ளியிலிருந்து வெளியில் வந்தாள் கோதை நாச்சியார்.

தீபங்களை ஏற்றியபின் வாசற்புறத்துக்கு அருகில் உள் பக்கமாக இருந்த சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து ஒலைச்