பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

145


வளையல் சில்லுகள் தான் கிடந்தன” என்று அவனிடம் அவற்றைக் காட்டினர் பணிப்பெண்கள். அவன் திகைத்தான்! துணுக்குற்றான். கோதை காணாமற் போய் விட்டாள் என்றபோது அவன் மனத்தில் பலவிதமான ஐயப்பாடுகள் உண்டாயின.

அண்டராதித்தன் உணர்ச்சிமயமானவன், இம்மாதிரிச் சமயங்களில் நிதானமாகச் சிந்தித்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியாது. தம்பி நாராயணன் சேந்தனைப் போய்ச் சந்தித்தால் அவன் ஏதாவது உருப்படியான வழியைக் கூறுவான். உதவியும் செய்வான். தம்பியைத் தவிர வேறு யாரிடமும் இந்தச் செய்தியைச் சொல்லி உதவி கேட்கப் போவதே வெட்கக்கேடு’ - என்று நினைத்தான்.

“பெண்களே, இந்தச் செய்தி உங்களோடு இருக்கட்டும். வேறு யாருக்கும் தெரியவேண்டாம். யாராவது கேட்டால் கோதையை அழைத்துக் கொண்டு நான் அவசர காரியமாக இடையாற்று மங்கலம் போயிருக்கிறேனென்றும், திரும்பி வருவதற்குச் சில நாட்கள் ஆகுமென்றும் சொல்லுங்கள்! இப்போது நான் அவளைத் தேடிக்கொண்டு போகிறேன். சத்திரத்துக் காரியங்களை ஒன்றும் குறைவில்லாமல் நீங்கள் தான் இன்னும் சில நாட்களுக்குக் கவனித்துக் கொள்ள வேண்டும்.”

“நீங்கள் சாப்பிடவில்லையே! சாப்பிட்டுவிட்டுப் போங்கள்” என்று பணிப்பெண்கள் கூறினர்.

“இல்லை. யாத்திரீகர்களைக் கவனியுங்கள். நான் புறப்படுகிறேன்” என்று சத்திரத்திற்குள்ளே காலை வைக்காமல் அப்படியே திரும்பி நடந்தான் அண்டராதித்த வைணவன். அவன் நிலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது. என்ன செய்யலாம் : உலகத்தில் எந்தப் பொருள் காணாமற்போனால் மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதற்குக் கூட வெட்கப்பட வேண்டுமோ, அந்தப் பொருளைக் காணவில்லையென்றால் மன வேதனையை என்னவென்று சொல்லி முடியும்! ஏற்கெனவே நடந்து நடந்து ஓய்ந்து போயிருந்த அவன் கால்கள் அந்தக்