பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

பாண்டிமாதேவி / முதல் பாகம்


பாதுகாப்புக் குறைவினால் மகாராணியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அந்தப் பழியைத் தளபதியின் தலையில் தான் சுமத்துவார்கள். எதற்கும் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தளபதி நினைத்தான். பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகக் குதிரையில் ஏறிப் புறப்பட்டான். குதிரை கோட்டாற்றிலுள்ள தென்திசைப் பெரும் படையின் கோட்டையை நோக்கிச் சென்றது.

சாலையோரத்து மரப்பொந்துகளில் நெருப்புக் கங்குகளைப் போன்ற விழிகளை உருட்டிக் கொண்டு. பதுங்கியிருந்த கோட்டான்கள் இடையிடையே எழுப்பிய குரூரமான ஒலிகள் தவிர முற்றிலும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் குதிரைக் குளம்புகளின் ஒலி அளவாக வரிசை யொத்துத் தொடர்ந்து ஒலிப்பது என்னவோ போலிருந்தது.

பூ சிறிது சிறிதாக மலர்ந்து இதழ்களின் நறுமணமும், அழகும் பரவுவது போல் ஒளியின் மலர்ச்சியை நோக்கி இருள் தோற்று நைந்து கொண்டிருக்கும் அந்தப் பின்னிரவு நேரத்தில் மண்ணும், விண்ணும், மரங்களும் செடி கொடிகளும், தன்னைச் சுற்றியுள்ள எங்கும் எதுவும் வார்த்தைகளின் பொருள் எல்லைக்குள் சிக்காத ஒரு பேரழகில் தோய்ந்தெழுந்து கொண்டிருப்பதுபோல் அவன் கண்களுக்குத் தோன்றியது.

தென் பாண்டி நாட்டுப் படைத் தலைவனுக்கு வாள் முனையில் போரிடும் வீரச்சுவை ஒன்று மட்டும்தான் கைவந்த பழக்கம் என்பதில்லை; ஆண்மையும், பருவமும், பொறுப்பும் வந்த பின்பு கற்றுத் தெரிந்து கொண்ட சுவை அது. இரத்தத்தோடு இரத்தமாகப் பழக்கத்தோடு பழக்கமாகத் தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும் பிறவியிலேயே வல்லாளதேவனிடம் இயல்பாக அமைந்திருக்கின்றன.எத்தகைய குழப்பமும் கலவரமும் தன்னையும், தன் பொறுப்பையும் சூழ்ந்திருந்தாலும் சுற்றுப் புறத்தின் அழகில் அந்த அழகு உண்டாக்கும் சிந்தனைகளில் தோயும் வழக்கம் மனப் பண்பால் அவனுக்கு இருந்தது.

தளபதி கோட்டாற்றை அடைந்து படையிருப்பினுள் நுழையும் போது கீழ்த்திசை வெளுத்து விட்டது. விடிந்ததும்