பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

167


விட்டாயே!” எழுந்து உட்கார்ந்து துறவி அவள் வெளியே நின்று கொண்டு தம்மை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைக் கண்டு இவ்வாறு கூறினார்.

“ஆமாம் ! அதிகாலையில் எழுந்திருந்து தவக் கடன்களையும், நியம ஒழுக்கங்களையும் தவறாமல் செய்யவேண்டி துறவிகளே இப்போதெல்லாம் அதிக நேரம் தூங்கத் தொடங்கி விட்டார்கள். பெண்களாகிய நாங்களும் அந்த வழக்கத்தை விட்டுவிட்டால் அதன் கதி என்ன ஆவது?” - அவள் வேண்டுமென்றே குறும்பாகப் பேசினாள். நீண்ட முகமும், கூரிய நாசியும் பிறரை மயக்கும் வசீகர விழிகளும் பொருந்திய அந்தத் துறவி ஒரிரு கணங்கள் அவளையே உற்றுப் பார்த்தார். அவருடைய இதழ்களில் மோகனப் புன்னகை அரும்பியிருந்தது. தோள்களையும் மார்பையும் சேர்த்துப் போர்த்திக்கொண்டிருந்த மெல்லிய காவித் துணி விலகி நழுவியது. அடியில் சிறுத்து மேலே பரந்து அகன்ற பொன்நிற மார்பு, உருண்டு திரண்ட வளமான தோள்கள், அவற்றைக் குழல்மொழி கடைக் கண்களால் திருட்டுப் பார்வை பார்த்தாள். பிறகு அவள் தரையைப் பார்த்தாள். கன்னங்கள் சிவந்தன. இவர் துறவியா? அல்லது நம் போன்ற பேதைப் பெண்களின் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொள்வதற்கு மாரவேள் கொண்ட மாறுவேடமா? என்று எண்ணி எண்ணி உள்ளம் உருகினாள் குழல்மொழி.

“பெண்ணே நீ என்மேல் வீணாகப் பழி சுமத்துகிறாய்! மான் தோலில் படுத்துத் துரங்கும் துறவியைப் பஞ்சணைகளோடு கூடிய மஞ்சத்தில் உறங்க வைத்தால் அவன் அந்தப் புதிய சுகத்தில் தன்னையும் மறந்து நேரத்தையும் மறந்து விடுவதுதானே இயற்கை?”

“பரவாயில்லை! துறவியை நாங்கள் மன்னித்து விடத் தயாராக இருக்கிறோம். எழுந்திருந்து வாருங்கள். நீராடுவதற்குப் போகலாம்.”

“நீராடுவதற்கு வேறு எங்கே போகவேண்டும்? இதோ இங்கேயே வசந்த மண்டபத்துக்குப் பின்னால் பறளியாற்றுப்