பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

173


புறப்பட்டு விட்டதால் கூட்டத்துக்கு வருவீர்களோ, வரமாட்டீர்களோ என்று அவருக்குச் சந்தேகம்!”

“சில நாட்களாக மகாமண்டலேசுவரருடைய சந்தேகத்துக்கு, யாரும் எதுவும், தப்ப முடிவதில்லை போலிருக்கிறது!” வேண்டுமென்றே சேந்தனின் வாயைக் கிண்டுவதற்காகத் தான் அவன் இவ்வாறு கூறினான். ஆனால் தளபதியின் பேச்சை விழிப்போடு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேந்தன் சுடச்சுடப் பதில் சொன்னான்.

“ஆமாம்! ஆமாம்! இப்போதெல்லாம் தென்பாண்டி நாட்டு அரசாட்சியைத் தங்கள் பலத்தினால் மட்டுமே காப்பதாக எண்ணிக்கொண்டு மகாமண்டலேசுவரர் மேலேயே சிலர் சந்தேகப்படுகிறார்களாமே!”

சேந்தன் தன்னைத்தான் குத்திக் காட்டுகிறான் என்று தளபதிக்குப் புரிந்துவிட்டது. ஆனாலும் அதைப் புரிந்து கொள்ளாததுபோல் வேண்டு மென்றே அவன் சிரித்து மழுப்பினான்.

அதன்பின் அவர்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தளபதி வல்லாளதேவன் நீராடிக் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு வருகிறவரை சேந்தன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இருவரும் கூற்றத்தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்டபோது பொழுது நன்றாகப் புலர்ந்து வெயில் பரவிவிட்டது. படைப்பள்ளியிலிருந்து சிறிது தொலைவு சென்றதும் நேரே புறத்தாயநாட்டு அரண்மனைக்குச் செல்லும் வழியை விட்டுவிட்டுச் சுற்றி வளைத்துத் திருநந்திக் கரை வழியே அரண்மனை செல்லும் சாலையில் குதிரையை அந்தச் சாலையில் நடத்தாமல் கடிவாளத்தைச் சுண்டி இழுத்து நிறுத்தினான். தளபதி பின் தங்கியதைப் பார்த்துச் சேந்தனும் குதிரையின் வேகத்தைக் குறைத்துக்கொண்டு திரும்பி, “என்ன தளபதி ஏன் நின்று விட்டீர்கள். நேரமாகவில்லையா?” என்று கேட்டான்.

“நீ போகிற பாதையாகப் போனால் கூட்டமெல்லாம் முடிந்த பின்புதான் அரண்மனைக்குப் போய்ச்சேரலாம். இதோ