பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

177


“தாம் அமர பதவி அடைந்த பின்னர் இப்படியெல்லாம் நம்முடைய நாட்டுக்கும், புதல்வனுக்கும், பட்டத்தரசி வானவன்மாதேவியார்க்கும் துன்பங்களும், தொல்லைகளும் ஏற்படுமென்று பராந்தக பாண்டியச் சக்கரவர்த்தி கனவிலாவது எண்ணியிருப்பாரா? அவர் இருந்தால்தான் இப்படிப்பட்ட நிலைகள் ஒன்றும் ஏற்பட்டிருக்கவே முடியாதே?” என்று மிகுந்த ஏக்கத்தோடு கூறிப் பெருமூச்சு விட்டார் மற்றொரு கூற்றத் தலைவர்.

அவர்கள் இப்படி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்த போது மந்திராலோசனை மண்டபத்து வாசலில் யாரோ பலர் பேசிக் கொண்டே உள்ளே வரும் ஒலி கேட்டது. ஒரு சேவகன் முன்னால் வேகமாக ஓடி வந்து ‘மகாமண்ட லேசுவரரும், மகாராணியும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூற்றத் தலைவர்களுக்கு முன் தகவல் கொடுத்தான். மூலைக் கொருவராகத் தங்களுக்குத் தோன்றியபடி இருக்கைகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள் மரியாதையாக எழுந்து நின்றனர். தங்களைவிட அதிகாரமும், மதிப்பும், பெருமையும் உள்ளவர்களை எதிர்பார்த்துச் சாதாரணமான மனிதர்கள் காத்திருக்கும் போது ஏற்படும் ஒருவகை அமைதி அங்கே திடீரென்று நிலவியது. வேலேந்திய வீரர் ஒடுக்கமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.

மகாராணி வானவன்மாதேவியாரும், இடையாற்று மங்கலம் நம்பியும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் அதங்கோட்டாசிரியர் பிரானும், பவழ்க்கணிவாயரும் வந்தனர். மகாராணியோடு ஆசிரியர் மகள் விலாசினியும், தளபதியின் தங்கை பகவதியும் உடன் வந்திருந்தனர். மண்டபத்தில் இருந்த கூற்றத் தலைவர்கள் எல்லோரையும் வணங்கி எதிர்கொண்டு வரவேற்றனர்.

தளபதி வல்லாளதேவன் எங்கே? அவனை அழைத்து வரச் சொல்லிச் சேந்தனை - அனுப்பினேனே! இன்றையக் கூட்டத்தில் அவன் கலந்து கொள்வது அவசியமாயிற்றே? இன்னும் வரவில்லையோ?” என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார் இடையாற்று மங்கலம் நம்பி, “வரவில்லை” என்று