பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

பாண்டிமாதேவி / முதல் பாகம்


குரலில் கணிவையும், இனிமையையும் வரவழைத்துக் கொண்டு விசாரித்தான்.

கீழே குனிந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒருவித உணர்ச்சியும் தென்படவில்லை. உதடுகள் அசைந்து கோணின. பதில் சொல்லவில்லை.

“உன்னைத்தான் அம்மா கேட்கிறேன். பதில் சொல்லேன்” என்று சிறிது உரத்த குரலில் இரைந்தான் தளபதி. அப்போதும் அவள் வாயிலிருந்து பதில் வரவில்லை. “ஐயா உங்களுக்கு என்ன வேண்டும் அந்தப் பெண்ணுக்குப் பேச வராது. அவள் பிறவிச் செவிடு-பிறவி ஊமை: பின்னாலிருந்து குரல் வந்தது.

தளபதி திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண்ணின் தந்தைபோல் தோன்றிய வயதான கிழவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். கேள்விப்பட்ட உண்மையில் ஏற்பட்ட அதிர்ச்சி, தான் கேட்க வேண்டிய கேள்வியைக்கூட மறந்து போகச் செய்து விட்டது. அவளா ஊமை அமுதக்குடம் போல் பருவத்தின் அழகு மெருகு செய்திருக்கும் அந்தப் பொற்சித்திரப் பாவையா ஊமை?

தளபதி பரிதாபத்தோடு அவளைப் பார்த்தான். படைப்புக் கடவுள் பொல்லாதவன், மிகமிகப் பொல்லாதவன்! என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.

“என்ன ஐயா? பூ ஏதாவது வேண்டுமா? வேண்டுமானால் சொல்லுங்கள். தரச் சொல்கிறேன்” என்று அந்தக் கிழவன் தொணதொணத்தான்.

“ஒன்றும் வேண்டாம்! இங்கே வாசலில் என் நண்பன் ஒருவன் குதிரைகளோடு நின்று கொண்டிருந்தான், நான் மடத்துக்குள் சென்று திரும்புவதற்குள் திடீரென்று எங்கோ போய்விட்டான். அவன் எந்தப் பக்கமாகப் போனான் என்று எனக்குத் தெரிய வேண்டும்.

“எனக்குத் தெரியாது! நான் பார்க்கவேயில்லை, ஐயா!"