பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

195


தேடினார்கள். ஆள் அகப்படவில்லை. படிக்கட்டு ஆரம்பமாகும் இடத்தில் ஒரு சிறிய சதுரமான வெள்ளைப் பட்டுத் துணி கிடந்தது. அதை எடுத்துக் கொண்டுபோய் மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தார்கள்.

“ஆள் அகப்படவில்லையா?” என்று சினம் பொங்கும் குரலில் அதட்டிக் கேட்டார் அவர்.

“நிலவறைக்குள் போய்த் தப்பிச் சென்றிருக்கலாமென்று தெரிகிறது. படி இறங்கும் வழியில் இந்தப் பட்டுத் துணி கிடைத்தது” என்று சொல்லித் துணியை அவரிடம் கொடுத்தார்கள், தேடிச் சென்று திரும்பியவர்கள்.

“உடனே ஒடிப்போய்க் கீழே நிலவறைக்கு இறங்கும் வழியின் கதவை அடைத்து முன்புறமாகத் தாழிட்டுவிடுங்கள்” என்று கூறி அவர்களை மறுபடியும் துரத்தினார் மகா மண்டலேசுவரர். அவர்கள் கதவை அடைக்கச் சென்றதும் அங்கு கூடியிருந்த அத்தனை பேருக்கும் நடுவில் அந்தப் பட்டுத் துணியை விரிக்காமல் ஒரு மூலையில் தூணின் மறுபுறம் மறைவில் போய் நின்றுகொண்டு அதை விரித்துப் பார்த்தார். பயமும் கலவரமும் அடைந்த பீதியின் நிழல் பதிந்த முகங்களால் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு மகாராணியாரும் கூற்றத் தலைவர்களும், மந்திராலோசனை மண்டபத்து இருக்கைகளில் வீற்றிருந்தனர். மெய்க் காப்பாளர்களும், வீரர்களும் நிலவறைக்குச் செல்லும் வழியை அடைப்பதற்காக அதன் கனமான பெரிய மரக்கதவை இழுத்து மூடும் ஓசை மண்டபம் எங்கும் எதிரொலித்தது.

மகாமண்டலேசுவரர் விரித்துப் பார்த்த அந்தப் பட்டுத் துணியில் ஏதோ ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு அடையாளச் சின்னம் போன்றதொரு சித்திரம் தீட்டப்பட்டிருந்தது.

ஒரு வீர இளைஞன் தன் வலது கையில் உருவி ஏந்திய வாளினால் தனது தலையை அரிந்து குருதி ஒழுக இடது கையால் தாங்கி நிற்பது போல் அந்த ஓவியம் அமைந்திருந்தது. அந்த இளைஞனின் தலைப்புறமாக மகரமீன் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஒவியத்தைக் கவனமாகப் பார்த்தார். பட்டுத் துணியில் வரையப் பெற்றிருந்த அந்த அடையாளச் சின்னம் அவருக்குப் புதியதல்ல. தென்னவன்