பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

பாண்டிமாதேவி / முதல் பாகம்


நம்பி நெடுஞ்செழியனோடு கடைச்சங்கப் பாண்டியர் மரபு. முடிந்து விடுகிறது. நம்பி நெடுஞ்செழியனுக்குப் பின் பாண்டிய நாட்டில் களப்பிரர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கடுங்கோன் தலையெடுத்த பின்பே பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி ஒழிந்தது.

“தன்பாலுரிமை நன்கனம் அமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த
கடுங்கோ னென்னும் கதிர்வேல் தென்னன்”

என்று அவன் புகழை வேள்விக்குடிச் செப்பேடு போற்றிப் பாடியது. கடுங்கோன் முதலான பிற்காலப் பாண்டியர் வழியில் கோச்சடையன் இரணதீரன், நெடுஞ்சடையன் பராந்தகன் முதலிய புகழ்பெற்ற அரசர்களெல்லாம் ஆண்டு முடித்தபின் வரகுண மகாராசன் என்னும் ஈடு இணையற்ற பேரரசன் முடிசூட்டிக் கொண்டான். பிறவிக் கடலைக் கடக்கும் ஞானத்தோணியாம் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் இவ்வரசன் காலத்திலேயே வாழ்ந்துள்ளார். சைவத் திருமுறைகளின் தொகுப்பாசிரியராகிய நம்பியாண்டார் நம்பி தம்முடைய கோயில் திருப்பண்ணியார் விருத்தத்தில் வரகுண மகாராசனைப் புகழ்ந்திருக்கிறார்.

வரகுண்னின் புதல்வனான சீமாறன் சீவல்லபன் தன் இரு மக்களுள் மூத்தவனான வரகுண வர்மனுக்குப் பட்டம் சூட்டிக் கொண்டான், இவனுக்கும் வானவன்மாதேவி என்னும் பட்டத்தரசிக்கும் பிறந்த புதல்வனே இந்தக் கதையில் வரும் இராசசிம்மன்.

இனி இங்கே தலைப்பில் காணும் கரவந்தபுரம் பற்றிக் காண்போம். தென்பாண்டி நாட்டுக்கும் வடபாண்டி நாட்டுக்கும் நடுவே நெல்வேலிக்கோட்டத்துத் தென்கோடியில் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசு ஒன்று இருந்தது. கோட்டையும் கொத்தளமுமாகப் பாதுகாப்பு அமைப்புடன் கரவந்தபுரம் என்ற பெயர் கொண்டு புகழ் பரப்பியது. இந்தக் கதையில் வரும் இராசசிம்மனின் தந்தையான சடையவர்ம பராந்தகனின் காலத்தில் கரவந்தபுரத்துக் கோட்டையும். அதன் ஆட்சி உரிமையும் உக்கிரன் என்னும் குறுநிலவேள் கையிலிருந்தது.