பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

211


யாராவது வந்து அவனிடம் அந்த வேலையைச் செய்யும்படி கூறியிருந்தால் முடியாது என்று மறுத்திருப்பான். அல்லது செய்வதாக ஒப்புக்கொண்டு செய்யாமல் இருந்திருப்பான். மகா மண்டலேசுவரரே கட்டளையிட்டிருக்கும் போது அலட்சியமாக இருக்க முடியுமா?

வெளிப்புறம் இழுத்து அடைத்திருந்த மரக்கதவைத் திறந்துகொண்டு நிலவறையின் இருண்ட படிகளில் இறங்கினான் சேந்தன். எந்த விநாடியும் அந்த இருள் பரப்பின் எந்த மூலையிலிருந்தும், எதிரி ஒருவரின் முரட்டுக் கைகள் தன் கழுத்திலோ, பிடரியிலோ பாய்ந்து அழுத்தலாம் என்ற முன் எச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது.

படிகளைக் கடந்து நிலவறைக்குள் இறங்கியாயிற்று. நின்ற இடத்திலிருந்து மிரண்ட விழிகளால் நான்கு புறமும் பார்த்தான். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த இருள் பழகுவதற்குச் சில கணங்கள் ஆயின. இருளை ஓரளவு ஊடுருவும் கூர்மை கண்களுக்கு வந்தபின் சுற்றிலும் நிறைந்திருந்த பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் கண்டான்.

வலதுபுறச் சுவர் முழுவதும் மனிதர்கள் தலையிழந்த முண்டங்களாய்த் தொங்குவதுபோல் செப்புக் கவசங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இன்னொருபுறம் மின்னல் துண்டங்களைச் சுவரில் பிடித்துப் பதிப்பித்து வைத்திருந்தது போல் வீர வாள்கள் வரிசையாக விளங்கின. மூலைக்கு மூலை பழைய நாணயங்கள். குவிந்திருந்தன. ஒரு காலத்தில் பாண்டி மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்து இப்போது பயன் படாமல்போன அந்த நாணயங்கள் தன் கால்களில் இடறிய போது, 'காசு எத்தனை பேர்க் காலை இடறிவிடுகிறது? நான் இப்போது காசை இடறிவிடுகிறேன்' - என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான் சேந்தன். நிலவறையில் தன்னைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் யாரோ உயிருடன் கூடிய மனிதர்கள் தன்னைப் போல் பயந்து ஒடுங்கி மெளனமாக அந்த இருளில் நின்று கொண்டிருப்பதுபோல் அவன் கண்களுக்குத் தோன்றின.