பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தன் உள்ளத்தின் அடக்கமுடியாத துன்ப உணர்ச்சிகளின் தடுக்க முடியாத வெள்ளத்தையே உடைத்து விடுவதுபோல் அவளிடம் மனம் திறந்து பேசினான் அவன்.

பேசிக்கொண்டே இருந்தவன் பேச்சை நிறுத்திவிட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபோது மென்மையான சோகம் படிவதைப் போன்ற கண்களின் கடைக்கோடியில் இரு நீர் முத்துக்கள் உதிர இருந்தன. அவன் பார்த்ததும் திடுக்கிட்டவள் போலத் தன் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் குழல்மொழி.

“அடடா! உணர்ச்சி வசப்பட்டு எதையெதையோ பேசி உன் துன்பத்தைக் கிளறி விட்டுவிட்டேன் போலிருக்கிறது. இதுவரை நான் கூறியவற்றை மறந்துவிடு. வா! உள்ளே போய் அந்தச் சுந்தரமுடியையும், பொற் சிம்மாசனத்தையும் வீர வாளையும் இருவருமே பார்த்துவிட்டு வருவோம்.”

“நான் வரவில்லை! நீங்கள் மட்டும் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்.”

“பரவாயில்லை! நீயும் வா!” இராசசிம்மன் அவளை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு உள்ளே போனான்.

ஆகா! அந்த அறைக்குள்தான் என்ன ஒளி! என்ன அழகு! தாமரைப் பூவைப் போல் வட்டமாகப் பளிங்கு மேடை! அந்த மேடையின் மேல் ஒரு நீண்ட, பெரிய தந்தப்பேழை. பக்கத்தில் பட்டு உறையினால் பொற்சிம்மாசனம் மூடீவைக்கப்பட்டிருந்தது. தரைப் பரப்பின் மேல் குங்குமச் சிவப்பில் ஒளி நிறைந்த இரத்தினக் கம்பளங்களை விரித்திருந்தார்கள். கோவிலின் கர்ப்பக் கிருகத்துக்குள் நிற்பதைப் போன்று பயபக்தியோடு தந்தப் பேழைக்கு முன் வந்து நின்றனர் இராசசிம்மனும் குழல்மொழியும். அறை முழுவதும் பரிமளமான மணங்கள் கலந்து நிறைந்திருந்தன. தெய்வச் சிலைக்கு முன்நின்று மரியாதை மிளிரும் கண்களால் பார்ப்பது போல் அந்தப் பேழையை இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான் இராசசிம்மன்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?"--அவள் கேட்டாள்.