பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள். என்னுடைய கருத்தை விரிவாகச் சொல்லி விடுகிறேன். இதுவரை இந்த எண்ணங்கள் எல்லாம் எனக்குத் தோன்றாமல் போய்விட வில்லை. அல்லது தோன்றியும் எவற்றையும் செயல்படுத்தக் கூடாது என்பதற்காக நான் பேசாமல் இருக்கவில்லை. என்னுடைய ஒவ்வொரு தயக்கத்துக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கும். இளவரசர் எங்கேயிருக்கிறார் என்று தேடுவதோ, தேடிக் கண்டுபிடிப்பதோ எனக்குக் கடினமான காரியமில்லை. நினைத்தால் இப்போதே கொண்டு வந்து நிறுத்திவிடமுடியும் என்னால். ஆனால் நான் சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்கிறேன். தென்பாண்டி நாட்டு அரசியலில் ஒழுங்கையும் அமைதியையும் ஏற்படுத்தி விட்டால் நமக்கு இருக்கும் பிற பகைகள் நீங்கும். அதன்பின் குமார பாண்டியருக்கு முடிசூட்டலாமென்பது என் எண்ணம்” என்று அவர் கூறிய சமாதானத்தைக் கேட்டபோது மற்றவர்களுக்கு அவரை எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

“அலை ஓய்ந்து நீராடமுடியாது. பகைவர்களை எண்ணிக் கொண்டே எவ்வளவு நாட்களுக்குப் பேசாமல் இருக்க முடியும்? தவிர முடிசூட்டுவதற்கும் இளவரசரைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தம்? முடி சூட்டுவதைப் பின்னால் வைத்துக் கொண்டாலும், இளவரசர் இப்போதே இங்கு வந்து இருக்கலாமே! அவ்வாறு இருப்பது மகாராணியாருக்கும் ஆறுதல் அளிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று துணிந்து இடையாற்று மங்கலம் நம்பியை நோக்கி நேருக்கு நேர் கூறினார், அதுவரை ஒன்றும் பேசாமல் அமைதியாக வீற்றிருந்த அதங்கோட்டாசிரியர்.

“வடதிசை மன்னர்களின் படையெடுப்பு இந்தச் சமயத்தில் நேரலாமென்று மகாமண்டலேசுவரர் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. குமாரபாண்டியர் இங்கு வந்திருந்தால் படையெடுப்பைச் சமாளிக்க நமக்கு நல்ல உதவி கிடைக்கும். குமார பாண்டியரின் தாய்வழி மாமன்மார்களும், மகாராணியாரின் பிறந்த வீட்டுச் சகோதரரும் ஆகிய சேரர்