பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

233


படை உதவியை நாம் பெறலாம். சேர வேந்தரிடம் அவர் படை உதவி செய்வதற்கு மறுக்க இயலாதபடி அவருடைய மருமராகிய குமாரபாண்டியரையே தூதனுப்பலாம். இதையெல்லாம் மகாமண்டலேசுவரர் நன்றாகச் சிந்தித்திருந்தால் இளவரசரைத் தேடி உடனே இங்கு அழைத்துவர ஏற்பாடு செய்திருக்கலாமே!” என்று பவழக் கனிவாயரும் அதங்கோட்டாசிரியரோடு சேர்ந்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்துப் பேசுவதற்கு அஞ்சி உட்கார்ந்திருந்த கூற்றத் தலைவர்களும் ஒவ்வொருவராக அதே கருத்தை ஆதரித்துப் பேசத் தலைப்பட்டனர். மகாராணியாரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை இடையாற்று மங்கலம் நம்பி குறிப்பாகப் புரிந்து கொண்டார். பல்லாண்டுகளாக நிமிர்ந்து நின்று பிடிவாதத்தாலும், அறிவுத் திறனாலும், தம் எண்ணமே எல்லோருடைய எண்ணமாகவும், தம் சொல்லே -எல்லோருடைய சொல்லாகவும், தம் செயலே எல்லோருடைய செயலாகவும்,-வெற்றி பெற்று வந்த அவருடைய அரசியல் வாழ்வில் முதல் முதலாக ஒரு வளைவு ஏற்பட்டது. மற்றவர்களை மாற்றி அவர்களைத் தம் வழிக்குக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியமான கலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அவர் முதன்முதலாக மற்றவர்களுக்காக மாறிக் கட்டுப்படும் நிலையை அடைந்தார். எதற்கும் எவராலும் அசைத்து விட முடியாமல் கல்லாய் முற்றிப் போயிருந்த அந்த உள்ளத்தில் சற்றே தளர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அந்தத் தளர்ச்சி வெளிப்பட்டு விடாமல் மிகத் தந்திரமாக மறைத்துக்கொண்டார் அவர். ஒரு நளினமான சிரிப்பினால் மட்டுமே அதை அவரால் மறைக்க முடிந்தது.

“நல்லது! இன்றைய தினம் உங்கள் எல்லோருடைய கருத்தையும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் தெளிவாக மறைக்காமல் என்னிடம் கூறிவிட்டீர்கள். நான் ஒப்புக் கொள்கிறேன். இன்னும் நான்கு நாட்களுக்குள் குமார பாண்டிரை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன்.”