பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

பாண்டிமாதேவி / முதல் பாகம்

கெல்லாம்-இவர்களுக்கு மட்டுமென்ன ? எனக்கும், தங்களுக்கும்கூட எச்சரித்து அறிவுறுத்தவேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு.”

இதைச் சொல்லிவிட்டு நம்பி சிறிது நிறுத்திக்கொண்டு எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். பின், மீண்டும் தொடர்ந்தார்: “தேசத்தைக் காப்பாற்றுவதற்கு முன்னால் இரகசியங்களைக் காப்பாற்றுவதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் தோல்விகள், பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நம்முடைய எதிரிகள் அறிந்து கொள்ளும்படியாக விட்டு விடக்கூடாது. இப்போது நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான். இடையாற்று மங்கலத்தில் அரசுரிமைப் பொருள்கள், களவுபோன செய்தி நம்மைத் தவிர மற்றவர் செவிகளில் பரவவிடாமல் பாதுகாக்கப்படவேண்டும். கரவந்தபுரத்திலிருந்து வந்த செய்தியும் அப்படியே. களவைக் கண்டுபிடிக்கவும், பகைவர் படையெடுப்பைச் சமாளிக்கவும் வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்யவேண்டும். ஆனால் நாம் செய்யும் எல்லா ஏற்பாடுகளும் நமக்குள் இருக்கவேண்டும். இப்போது நாம் இருக்கும் இந்தக் கட்டிடத்தின் வாயிற் கதவுகளை நான் அடைக்கச் சொல்லி விட்டேன். பிறரிடம் செய்தியைச் சொல்லிவிட மனத்தில் ஏற்படும் ஆவலையோ வாய்த் துடிப்பையோ, நான் அடைக்க முடியாது. நீங்கள் எல்லோரும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்.”

“மகாமண்டலேசுவரருடைய இந்த வேண்டுகோள் நம்முடைய நன்மைக்காகவே என்பதை நீங்கள் எல்லோரும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். வயதும், அனுபவமும் உள்ள அவர் கட்டளைகளை என் கட்டளைகளாகவே நினைத்துப் போற்ற வேண்டியது உங்கள் கடமை” என்று அதையடுத்து மகாராணி வானவன்மாதேவியார் கூறினார். எல்லோரும் சிலைபோல் அடக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். மகா மண்டலேசுவரரை எதிர்த்து மடக்கி என்னென்னவோ குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்று துடி துடித்துக்-