பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

பாண்டிமாதேவி / முதல் பாகம்

“மகாராணி! இது பலவகையிலும் சோதனைகள் நம்மைச் சூழ்கின்ற காலம். இந்த நாட்டின் நன்மைக்கும், பாதுகாப்புக்கும், ஏற்ற எதையும் செய்கின்ற அதிகாரங்களை முன்பே நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைப் பூரணமாகப் பயன்படுத்த வேண்டிய சமயம் என்னை நோக்கி வந்திருக்கிறது.”

“மகாமண்டலேசுவரருக்கு எந்த உரிமையையும் எப்போதும் நான் மறுத்ததில்லையே?’ வானவன்மாதேவியிடமிருந்து சுருக்கமாகவும் விநயமாகவும் மறுமொழி பிறந்தது.

“தங்கள் அன்புள்ளம் மறுப்பறியாததென்று நான் அறிவேன். இருந்தாலும் நிலைமையைக் கூறிவிடவேண்டியது என் கடமை: இந்தச் சொற்களைச் சொல்லும்போது புன்னகை-அல்ல, புன்னகை செய்வது போன்ற சாயல் மகா மண்டலேசுவரரின் முகத்தில் நிலவி நின்றது.

மகாராணி மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். தயக்கத்தோடு கேட்டார்: “மகா மண்டலேசுவரரே! இராசசிம்மனை இடையாற்று மங்கலத்திலிருந்து உடனே அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினர்களே..?"

வானவன்மாதேவியின் இந்தக் கேள்வி அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். அவர் தயங்கினார். மிடுக்கு நிறைந்த அவருடைய நிமிர்ந்த பார்வையில் சற்றே சோர்வு நிழலாடி மறைந்தது.

“மகாராணி. நான் அதைப் பற்றித் தங்களிடம் தனிமையில் சிறிது நேரம் பேசவேண்டும். புதிதாக வந்த செய்திகள் சிறிது குழப்பத்தை உண்டாக்கிவிட்டன...!”

“இந்தச் செய்திகளுக்கும் நீங்கள் இராசசிம்மனை அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தமோ?”

“இப்போது இந்த இடத்தில் இந்தச் சூழலில் தங்களிடம் அதைப் பேச இயலாதவனாக இருக்கிறேன். தயவுசெய்து என்னைப் பொறுத்தருளவேண்டும். நாம் தனிமையில் மட்டும் தான் பேச முடிந்த செய்தி அது!”

மகாராணி பதில் பேசவில்லை.