பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

282

பாண்டிமாதேவி / முதல் பாகம்

குமார பாண்டியனுக்கும், மதிவதனிக்கும் தரையில் நடப்பதாகவே நினைவில்லை. வானில் நிலவில் மிதப்பதுபோல் ஒரு பூரிப்பு. அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்ட அந்தச் சில விநாடிகள் என்றுமே நிலைக்கும் விநாடிகள்; மகா கவிகளைப் பாடவைக்கும் விநாடிகள் அவை.

எதிரே சக்கசேனாபதி தேடிக்கொண்டு வந்திருக்கா விட்டால் குமார பாண்டியனுக்குச் சுய நினைவு வர இன்னும் எவ்வளவு நேரமாகியிருக்குமென்றும் சொல்ல முடியாது.

“இளவரசே! நீங்கள் நாளைக் காலையில் பயணம் செய்ய வேண்டியதை மறந்து இப்படிச் சுற்றிக்கொண்டிருந்தால் உடல் என்ன ஆகும்? போகும்போது சொல்லிக் கொள்ளாமல் வேறு போய் விட்டீர்கள். இரவில் நேரங்கெட்ட நேரத்தில் நான் எங்கே வந்து உங்களைத் தேடுவேன்?”

“கடல் ஒரமாகச் சிறிது தொலைவு உலாவி விட்டு வந்தேன். பகலில் உறங்கிவிட்டதால் எனக்கு உறக்கம் வரவில்லை.”

போன இடத்தில் நடந்த நிகழ்ச்சியை அவன் சக்கசேனாபதியிடம் கூறவில்லை. இருவரும் கூடாரத்தில் போய்ப் படுத்துக்கொண்டார்கள்.

இரவு நேரங்கழித்துப் படுத்துக்கொண்டதனால் காலையில் விடிந்தபோது பொழுது வழக்கத்தைவிட விரைவாகவே புலர்ந்து விட்டது போலிருந்தது. சக்கசேனாபதி விரைவாகவே பயண ஏற்பாடுகளையெல்லாம் முழுமையாகச் செய்து வைத்திருந்தார். பொழுது புலர்ந்தும், புலராமலும் மங்கலாக இருந்தநேரத்தில் அவர்களுடைய கப்பல் புறப்பட்டது. காலை நேரத்தின் மணத்தோடு கூடிய ஒரு வகைக் குளிர் காற்று செம்பவழத் தீவின் உயிர்க் குலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். குமார பாண்டியனும் சக்கசேனாபதியும் கப்பலின் மேல் தளத்துத் திறந்த வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். மேலே வைகறையின் வானவெளி வெண்ணிலப்பட்டு விரிப்பைப் போல் படர்ந்து கிடந்தது. அந்த வெண்ணிலத் துணியின் கீழே