பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

287

பெரும்பெயர்ச்சாத்தன் நின்றான். அவன் பக்கத்தில் அவனுடைய பட்டத்தரசி அடக்க ஒடுக்கமாக நின்றாள். அரச பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் சூழ நின்றார்கள், விலைபேச வந்திருக்கும் பெருஞ் செல்வர்களான வாணிகர்கள் இன்னும் சிறிது தள்ளி நின்றார்கள். பல விதமான தோற்றத்தோடு கூடிய, பலமொழிகள் பேசும், பல தேசத்து வாணிகர்கள் அங்கே நிறைந்திருந்தனர். கடல் ஓசையும் வாத்தியங்களின் ஒலியும், பலமொழிக் குரல்களும் கலந்து ஒரே ஒலிக் குழப்பமாக இருந்தன. தண்ணிருக்குள் மூச்சை அடக்கும் ஆற்றல் வாய்ந்த கட்டிளங் காளைகளான இளைஞர்கள் வாட்டசாட்டமான தோற்றதோடு வரிசையாக நின்றார்கள். அவர்கள்தாம் முத்துக்குளிக்காகக் கடலில் மூழ்கும் பரதவ வாலிபர்கள். பளிங்கால் இழைத்தெடுத்துப் பொருந்தினது போல் உடற்கட்டுள்ள அவர்கள் தோற்றம் மனத்தைக் கவர்ந்தது.

சலாபத்துக்குப் பக்கத்தில் இருந்த சிறிய கோவிலில் முத்துக் குளிப்பதற்கு முன் அவர்கள் வழக்கமாக வழிபடும் கடல் தெய்வத்தின் சிலை இருந்தது. முறைப்படி அதை வழிபட்டபின் பரதவ இளைஞர்கள் அரசனை வணங்கிவிட்டு ஒவ்வொருவராகக் கடலில் குதித்தனர்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பெயர்ச் சாத்தனின் பட்டத்தரசி, “எவ்வளவு துணிவு இந்த வாலிபர்களுக்கு?” என்று வியப்புடன் தன் கணவனை நோக்கிக் கூறினாள். பெரும் பெயர்ச்சாத்தன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான்.

“இப்படிச் சில ஆண்பிள்ளைகள் துணிந்தால்தான் உங்களைப் போன்ற பெண்களின் கழுத்தில் முத்துமாலை இருக்கமுடியும்.” அவன் அவள் கழுத்தை வளைத்துக்கிடந்த முத்து மாலையைச் சுட்டிக்காட்டிச் சொன்னான்.

“ஓகோ பெண்களை மட்டம் தட்டியா பேசுகிறீர்கள்?”

“அப்படி ஒன்றுமில்லை! உலகத்தில் ஆண்பிள்ளைகள் அதிகத் துன்பத்தின் பேரில் அடையவேண்டிய பொருள்களெல்லாம் பெண்களின் தேவைகளாயிருக்கின்றன என்றுதான் சொல்ல வந்தேன்."