பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

அப்புறமும் பெயர்ச்சாத்தனின் மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. எண்ணங்களிலிருந்து விடுபட்டுச் சிந்தனைகளைத் தவிர்க்க முயன்றாலும் மறுபடியும் அவன் மனம் வலுவில் சிந்தனைகளிலேயே போய் ஆழ்ந்தது.

கொற்கையில் புகுந்து குழப்பம் செய்ததுபோல் இடையாற்று மங்கலத்தில் நடந்த கொள்ளைக்கும் எதிரிகள்தான் காரணமோ என்று நினைத்தது அவன் மனம். 'இவ்வளவெல்லாம் இங்கே குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடக்கின்றன. குமார பாண்டியர் எங்கிருந்தால்தான் என்ன? ஏதாவது ஒரு குறிப்புக் கூடவா அவர் காதுக்கு எட்டாமல் இருக்கும் தளபதி வல்லாளதேவனின் படைத்திறனும், இடையாற்றுமங்கலம் நம்பியின் இணையற்ற சாமர்த்தியமும் எங்கே போய் விட்டன?'

மகாமண்டலேசுவரரை அவன் என்றும் புரிந்துகொள்ள முடிந்ததில்லை. புரிந்துகொள்கிற அளவுக்கு அவனை இவர் நெருங்கவிட்டதும் இல்லை. சாமர்த்தியமே உருவான ஒரு பெரும் புதிர் என்று அவரைப் பற்றி அவன் முடிவு செய்து வைத்திருந்தான். தளபதி வல்லாளதேவன் கடமையில் கருத்துள்ளவன். சிறிது உணர்ச்சித் துடிப்பு மிகுந்தவன் என்பதும் அவன் அறிந்த விவரமே. மகாராணியாரையும், குமார பாண்டியரையும் பொறுத்தமட்டில் அவனுக்கு ஒரே விதமான எண்ணம்தான். “வணக்கத்துக்குரியவர்கள், அன்பும், அனுதாபமும் செலுத்தத்தக்கவர்கள்”. தன் உயிரின் இறுதித் துடிப்புவரை அந்தப் பேரரசியின் வாழ்வுக்குக் கட்டுப்பட்டு உதவ வேண்டுமென்ற அவன் எண்ணத்தை ஊழி பெயரினும் மாற்ற இயலாது. இல்லையானால் அவனைத் தங்களுடைய வனாக்கிக் கொள்ள வடதிசை அரசர் பலமுறைகள் முயன்றும் அவன் மறுத்திருக்க மாட்டான்.

மனத்தின் தெளிவற்ற நிலையைச் சரி செய்து கொள்வதற்கு எங்கேயாவது திறந்த வெளியில் காற்றுப்படும்படி உலாவவேண்டும் போலிருந்தது.