பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

இராசசிம்மன் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அவனோ தன்னாடு போகாமல் இந்த அரசுரிமைப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு அசட்டுத்தனமாக என்னென்னவோ செய்துவிட்டுப் போயிருக்கிறான். எனக்கு ஏது நிம்மதி? என் தாய் கன்னியாகுமரி அன்னையை அடிக்கடி வழிபட்டு என் துயரங்களை மறக்க முயலலாம் என்றால் நான் வெளியில் புறப்படுவதே என் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது.”

“கவலைகளையெல்லாம் எனக்கு விட்டுவிடுங்கள் ! அவற்றுக்காகவே நான் இருக்கிறேன். தங்களைப் போன்றவர்களுக்கு அதிகக் கவலைகள் இருந்தால் நிம்மதி இராது. என்னைப் போன்றவனுக்கு அதிகக் கவலைகள் சூழும்போது தான் சிந்தனை நிம்மதியாகத் திட்டமிடும். உங்கள் மனம் குழம்பியிருக்கிறது. இப்போது உங்களுக்குத் தனிமை தேவை. நான் பின்பு வந்து சந்திக்கிறேன்.”

மகாமண்டலேசுவரர் அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். துயரம் குமுறிக்கொண்டு வரும்போது, மிகவும் வேண்டிய மனிதர் எதிரில் இருந்தாலே அழவேண்டும் போலத் தோன்றும். அழுது தணித்துக் கொள்ளவும் துணிவு இருக்காது, தனிமையில் விட்டுவிட்டால் ஒருவாறு தணியும் என்று கருதியே அவர் அங்கிருந்து சென்றார். அவர் சென்ற பின்பும் நெடுநேரமாக மகாராணி அமைதியாகக் கண்ணிர் வடித்தவாறு அதே இடத்தில் வீற்றிருந்தார். அமைதியோ, நிம்மதியோ ஏற்படுகிற வழியில்லை. கவலைகளை மறக்க, அல்லது மறைக்க ஏதாவது புதிய பேச்சு வேண்டியிருந்தது. கோட்டாற்றிலுள்ள சமணப் பள்ளியில் குணவீர பண்டிதர், கமலவாகன பண்டிதர் என்று இரண்டு சமணத் துறவிகள் இருந்தனர். அவர்கள் எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் மகாராணியாரைச் சந்திக்க வருவதுண்டு. வந்தால் நீண்ட நேரம் சமய சம்பந்தமான தத்துவங்களைப் பேசிவிட்டுப் போவார்கள். அவர்கள் வந்து பேசிவிட்டுச் சென்றபின்பு அதைக்கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனத்தில் அழுக்கைத் துடைத்து வாசனை பூசிய மாதிரி ஒரு சாந்தி, ஒரு நம்பிக்கை, வாழ்க்கை முழுவதும் நல்ல விளையாட்டு என்ற பயமற்ற ஒரு எண்ணம் ஏற்படும்.