பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

அறச்சாலைகள் இருந்தால் என்ன ? அங்கெல்லாம அண்டராதித்தனும், கோதையும் இல்லாதவரை அவை அறச்சாலைகளாக முடியுமா? சிரிப்பதற்கு ஆளில்லாத அறச்சாலைகள் அவை! கடல்கடந்தும், தரை வழியாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து யாத்திரீகர்கள் வந்தாலும் அவர்களையெல்லாம் அண்ணன் தம்பிகளாக, உடன் பிறந்தோராக எண்ணும் கோதையும் அண்டராதித்தனும்தான் பார்க்கப்போனால் இந்நாட்டின் உண்மையான பிரமுகர்கள்! ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற தத்துவத்தை மெய்ப்பித்துக்கொண்டு வருபவர்கள் அவர்கள்தாமே?—அன்று ஏனோ, அந்தத் துரதன் மனத்தில் முன்சிறை மணியகாரனும், அவன் மனைவியுமே நிறைந்திருந்தார்கள். அவர்களைப்பற்றியே அவன் அதிகமாகச் சிந்தித்தான். தான் கொண்டுபோகும் அரசாங்கச் செய்தி, அதன் அவசரம் ஆகியவை கூட அவ்வளவாக அவனுடைய மனத்தைக் கவர்ந்துவிடவில்லை.

ஆனால் நண்பகலில் அவன் முன்சிறை அறக் கோட்டத்தை அடைந்தபோது பெரிதும் ஏமாற்றமடைந்தான். அங்கே அண்டராதித்த வைணவனும் கோதையும் இல்லை. “கொற்கை முத்துக்குளி விழாவைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள்” என்று அறங்கோட்டத்துப் பணியாட்கள் கூறினார்கள். தூதனுக்கு அன்றும் அங்கே பகல் உணவு கிடைத்தது. ஆனால் அண்டராதித்தனும், கோதையும் பக்கத்திலிருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி உபசாரம் செய்து போடுகிற சாப்பாடு மாதிரி இல்லை அது! அங்கு அதிக நேரம் தங்கக்கூட விருப்பமில்லாமல் உடனே புறப்பட்டு விட்டான் அவன். கொற்கையிலிருந்து திரும்பினாலும் தான். செல்லுகிற அதே சாலை வழியாகத்தான் திரும்பவேண்டும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் முத்துக்குளி விழாவைப் பார்க்கப்போகிறவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்பமாட்டார்கள் என்று தோன்றியதனால் அவர்களை வழியில் எங்கேயாவது எதிரே சந்திக்கலாம் என்ற நம்பிக்கையை அவன் கைவிட்டுவிட்டான்.

அதே நிலையில் இடைவழியில் எங்கும் தங்காமல் பயணத்தைத் தொடர்ந்தால், அன்று இரவு