பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பாண்டிமாதேவி / முதல் பாகம்


பார்த்துக் கொண்டிருந்தனர். மகாராணியாரோ ஒலையைப் படிக்கவுமில்லை; வாய் திறந்து பேசவுமில்லை. ஊசி விழுந்தாலும் அது தெளிவாகக் கேட்கும் படியான அந்த அமைதி சில விநாடிகள் நீடித்தது. தளபதியின் பார்வையில் தூணோரமாக வளைந்து நெளிந்து கிடந்த வேல் தென்பட்டது. அதுதான் மகாராணியின் மேல் எறியப்பட்ட வேலாக இருக்க வேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டான்.

“தளபதி ! கோட்டையிலிருந்து புறப்பட்டபோது ஆலயத்துக்குப் போகிறோம் என்ற அமைதியில் மனக்குழப்பங்களை மறந்து நிம்மதியோடு புறப்பட்டேன். இப்பேர்தோ இங்கு வந்தபின் நடந்த நிகழ்ச்சியால் மனம் குழம்பிப் போயிருக்கிறது. வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாத அதிர்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். என்ன பேசுவது? எதைச் சிந்திப்பது? எதைச் செய்வது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. வரவர அரசாட்சியில் பற்றுக் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று, இந்த அரசையும் ஆட்சியையும் கைப்பற்றுவதற்காகப் பொய்யும், சூழ்ச்சியும் செய்யும் எதிரிகளிடம் இதை உதறிவிட்டு எங்காவது போய்ப் புத்த மதத்தில் சேர்ந்து பிறவிப் பிணிக்கு மருந்து தேடவேண்டும்; அல்லது ஓடிப்போன இராசசிம்மனைத் தேடிப் பிடித்துக்கொண்டு வந்து முடி சூட்டிவிட்டு நான் நிம்மதியாக இருக்கவேண்டும். இந்த இரண்டில் ஏதாவதொன்று நடந்தாலொழிய என்னால் இப்படியே மதில் மேல் பூனையாகக் காலங் கழிக்க முடியாது. என்னைப்போல் நாயகனை இழந்த ஒரு பெண்ணை இந்தத் தென்பாண்டி நாட்டுக்குப் பேரரசியாக உரிமை கொண்டாடி, இன்பத்திலும் துன்பத்திலும் எவ்வளவோ ஒத்துழைக்கிறீர்கள். அதற்காக நான் பெருமைப்படத்தான் வேண்டும். ஆனால் - இந்தப் பெருமையைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளும் நெஞ்சு உரம் எனக்கு இல்லை. என் அருமைக் குமாரனும் உங்கள் இளைய சக்கரவர்த்தியுமான இராசசிம்மன் இலங்கைத் தீவில் போய்ச் சுற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள்.