பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

பாண்டிமாதேவி / இரண்டாம் பாகம்

மொட்டுக்களைப் போலத்துடித்தன அவள் இதழ்கள். வலம்புரிச் சங்கோடு தன் நெஞ்சையும் கொண்டு போனவனை அவ்வளவு சுலபமாக- அவர் மதிப்பிட்டதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அடிபட்ட புலி சீறுவதுபோல் தந்தையை எதிர்த்துச் சீறின. அவள் சொற்கள். “உங்களையும் இந்தத் தீவையும் எந்நாளும் மறக்கமாட்டேன் என்று நேற்று அவர் நமக்கு நன்றி கூறும்போது நீங்களும்தானே உடன் இருந்தீர்கள் அப்பா?”

பெண்ணின் சினம் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கியது.

"பேதைப் பெண்ணே மனிதர்கள் சொல்லுகிற வார்த்தைகளை எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மையாக எடுத்துக் கொண்டு ஏமாறக்கூடாது! செல்வந்தர்கள் எதையுமே சீக்கிரமாக மறந்துவிடுவார்கள். உலகத்தில் தாங்கள் செல்வர்களாக இருப்பதற்குக் காரணமாக எங்கோ சிலர் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதையே அவர்கள் மறந்து விடும்போது உன்னையும் என்னையுமா நினைத்துக்கொண்டே இருக்கப்போகிறார்கள்?”

“இல்லை! இல்லவே இல்லை, அவர் என்னை மறக்க மாட்டார்”—குழந்தைபோல் முரண்டுபிடித்துப் பேசினாள் அவள். என்னவோ தெரியவில்லை, தன்னடக்கத்தையும் மீறிப் பேசும் ஒரு துணிவு வெறி அவளுக்கு அந்தச் சமயத்தில் உண்டாகியிருந்தது.

“மதிவதனி! 'அனிச்சம்' என்று ஒரு வகைப்பூ இருக்கிறது. அது மோந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாடிப் போய்விடும். செல்வந்தர்கள் கொடுத்துவிட்டுச் செல்லும் உறுதிமொழிகளும் அப்படித்தான். அவற்றை உண்மை என்று நம்ப முயலும்போதே அவை பொய்யாகி வாடிவிடும். செல்வந்தனான ஆண் மகன் ஒருவனின் வார்த்தையை நம்பிக் கொண்டு ஏங்கிக் கால வெள்ளத்தில் கரைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். பெயர் சகுந்தலை. அந்த ஆண் மகனோ அவளை மறந்தே போனான், அந்தப் பெண்ணின் ஏக்கத்தை உலகத்துக்கு எடுத்துக்கூற ஒரு மகாகவி தேவையாயிருந்தது. உனக்குத்தான்