பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தொடர்போல் அந்த மாளிகையைச் சுற்றி வளைந்து செல்லும் பிரம்மாண்டமான கோட்டை மதிற்கவர்களுக்கு இப்பால் வெட்டப்படாத இயற்கை அகழிகளைப் போல் புத்தனாறும், பறளியாறும் இரு கரையும் நிரப்பி நீர் ஓடிக்கொண்டிருந்தன.

பகல் நேரத்தில் கதிரவன் ஒளியில் இந்த மாளிகையைப் பார்ப்பதற்குப் பதிலாக, நடு இரவில் உலகமே ஆழ்ந்த அமைதியின் மாபெரும் ஒடுக்கத்தினுள் உறங்கிக் கிடக்கும் போது பார்க்கும்படியான அவசர வாய்ப்பை இந்தக் கதை ஏற்படுத்தி விடுகிறது. நடு இரவானால் என்ன? மடல் விரித்த கமுகம் பாளையைப் போலப் பெளர்ணமி நிலா ஒளிக் கதிர்களை உமிழ்ந்து கொண்டிருக்கிறதே! குளிர்ந்த கடற்காற்றின் சுகத்தை அநுபவித்துக் கொண்டே வளம் நிறைந்த நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் நடந்து செல்வதற்கு யாராவது சோம்பல் அடைவார்களா?

இடையாற்று மங்கலத்துக்குச் செல்லும் கீழ்த் திசைச் சாலையில் ஆளரவமற்ற அந்த நடு யாமத்தில் ஒரு வெண்ணிறப் புரவி கன வேகமாகப் பாய்ந்து சென்றது. அதன் மேல் தளபதி வல்லாளதேவனே வீற்றிருப்பதை நிலா ஒளியில் நன்றாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவன் முகத்தில் அவசர காரியத்தை எதிர்நோக்கிப் பிரயாணம் செய்யும் பரபரப்பைக் காணமுடிந்தது.

வானமும், பூமியும், திசைகளும், திசைக் கோணங்களும் அமைதியில் கட்டுண்டு கிடந்த அந்த யாமப் பொழுதில் யாரோ மத்தளத்தின் புறமுதுகில் ‘தடதட’வென்று தட்டுவது போல் குதிரையின் குளம்பேர்சை எதிரொலித்தது. வாயு வேகம், மனோவேகம் என்பார்களே, அவையெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்! தென் திசைத் தளபதி வல்லாளதேவனின் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருந்தது!

சாதாரணமாகக் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்று மங்கலத்துக்கு ஒன்றரை நாழிகை நேரம் குதிரைப் பயணத்துக்கு ஆகும். காரியத்தின் அவசரத்தை முன்னிட்டுக் கொண்டு வந்திருந்த வல்லாளதேவன் ஒரு நாழிகை நேரத்துக்கு முன்னதாகவே இடையாற்று மங்கலத்தை நெருங்கி விட்டான்.